காஷ்மீர் விவகாரங்களை கவனிக்க மத்திய மந்திரிகள் குழு - ரவிசங்கர் பிரசாத், தர்மேந்திர பிரதான் இடம் பிடித்தனர்


காஷ்மீர் விவகாரங்களை கவனிக்க மத்திய மந்திரிகள் குழு - ரவிசங்கர் பிரசாத், தர்மேந்திர பிரதான் இடம் பிடித்தனர்
x
தினத்தந்தி 28 Aug 2019 10:30 PM GMT (Updated: 28 Aug 2019 10:03 PM GMT)

காஷ்மீர் விவகாரங்களை கவனிக்க மத்திய மந்திரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக்குழுவில் ரவிசங்கர் பிரசாத், தர்மேந்திர பிரதான் இடம் பிடித்தனர்.

புதுடெல்லி,

காஷ்மீர் மாநிலத்துக்கு தனி அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசன சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்து மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும் அந்த மாநிலத்தை காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக மாற்றி அமைத்து, தனது நேரடி கட்டுப்பாட்டின்கீழ் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

கடந்த 5-ந் தேதி மேற்கொள்ளப்பட்ட இந்த அதிரடி நடவடிக்கைகள், பாகிஸ்தானுக்கு பேரிடியாக அமைந்துள்ளது. இந்த மாற்றங்கள் அக்டோபர் 31-ந் தேதி நடைமுறைக்கு வருகின்றன.

இந்தநிலையில், காஷ்மீர் விவகாரங்களைக் கவனிப்பதற்காக மத்திய மந்திரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவில் மத்திய மந்திரிகள் ரவிசங்கர் பிரசாத் (சட்டம்), தாவர்சந்த் கெலாட் (சமூக நீதி மற்றும் சுற்றுச்சூழல்), நரேந்திர சிங் தோமர் (விவசாயம்), ஜிதேந்திர சிங் (பிரதமர் அலுவலகம்), தர்மேந்திர பிரதான் (பெட்ரோலியம்) ஆகியோர் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மத்திய மந்திரிகள் குழு கீழ்க்கண்ட பணிகளைக் கவனிக்கும்:-

* காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசன சட்டப்பிரிவு 370- ஐ ரத்து செய்துள்ளதால் எழுந்துள்ள பிரச்சினைகள்

* காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்துள்ளதால் எழுந்துள்ள பிரச்சினைகள்

* 2 யூனியன் பிரதேசங்களின் வளர்ச்சிக்கான திட்டங்கள், அங்கு மேற்கொள்ள வேண்டிய பொருளாதார, சமூக நடவடிக்கைகள், காஷ்மீர் விவகாரங்களை கவனிக்க அமைக்கப்பட்டுள்ள மத்திய மந்திரிகள் குழுவின் முதல் கூட்டம், செப்டம்பர் மாதம் முதல் வாரம் நடத்தப்படும்.

இதற்கிடையே காஷ்மீரை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதற்கான செயல்முறைகளை முன்னெடுத்து செல்வதற்கான வழிமுறைகள் குறித்து டெல்லியில் 15 மத்திய அமைச்சகங்கள், துறைகளின் செயலாளர்கள் நேற்றுமுன்தினம் கூடி விவாதித்தனர்.

காஷ்மீரில் இயல்பு நிலையை மீண்டும் கொண்டு வருவதை விரைவுபடுத்துவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் ஆலோசனை நடத்தினர்.


Next Story