500 ரூபாய் கள்ள நோட்டுகள் 121 சதவீதம் அதிகரித்து உள்ளது - ரிசர்வ் வங்கி


500 ரூபாய் கள்ள நோட்டுகள் 121 சதவீதம் அதிகரித்து உள்ளது - ரிசர்வ் வங்கி
x
தினத்தந்தி 30 Aug 2019 8:42 AM GMT (Updated: 30 Aug 2019 8:42 AM GMT)

2018-19ஆம் நிதியாண்டில் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் கடந்த நிதியாண்டில் இருந்ததை விட 121 சதவீதம் இப்போது அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை தெரிவித்துள்ளது.

புதுடெல்லி

பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழந்த போது அதற்கு ஈடுசெய்யும் வகையில் ரிசர்வ் வங்கி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்து புழக்கத்தில் விட்டது. பின்னர் சில்லரைத் தட்டுப்பாடு காரணமாக புதிதாக 500 ரூபாய் நோட்டுகளும் 200 ரூபாய் நோட்டுகளும் புழக்கத்திற்கு விடப்பட்டன. ஆனால் தற்போது 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவது குறைந்துள்ளது.

நடப்பு நிதியாண்டில் ரிசர்வ் வங்கியால் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 14 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை நிறுத்திக் கொள்ள ரிசர்வ் வங்கி முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் 500 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

ரிசர்வ் வங்கி தனது 2018-19ஆம் ஆண்டிற்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் பணப்புழக்க நிலை குறித்து தெரிவித்துள்ளது. அதன்படி வங்கிகளில் பணப்புழக்கம் 2017-18ஆம் ஆண்டைவிட 6.2 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கு காரணம் 500ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளின் பணப்புழக்கம் அதிகரித்ததே ஆகும்.

அத்துடன் இந்த அறிக்கையில் நாட்டிலுள்ள கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை தொடர்பான தரவுகளும் தரப்பட்டுள்ளது. அதன்படி 2018-19ஆம் நிதியாண்டில் 3,17,384 கள்ள நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் அதிகபட்சமாக 2,21,218 அளவிலான 100ரூபாய் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருந்துள்ளன. அதேபோல புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 500 ரூபாய் நோட்டுகளில் 21,865 கள்ள நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 2017-18ஆம் ஆண்டு இருந்த அளவைவிட 121 சதவிகிதம் அதிகமாகும். அதாவது 2017-18ஆம் ஆண்டில் 500 ரூபாய் நோட்டுகளில் 9892 கள்ள நோட்டுகள் இருந்துள்ளன.

அதேபோல 2000 ரூபாய் நோட்டுகளில் 21,847 கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருந்துள்ளன. இது 2017-18ஆம் ஆண்டு இருந்த கள்ள நோட்டுகள் அளவைவிட 21.9 சதவிகிதம் அதிகமாகும். அதாவது 2017-18ஆம் ஆண்டில் 2000 ரூபாய் நோட்டுகளில் 17,929 கள்ள நோட்டுகள் இருந்துள்ளன. மேலும் புதிதாக அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ள 200 ரூபாய் நோட்டுகளில் 12,728 கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருந்தது தெரியவந்துள்ளது.

2017-18ஆம் ஆண்டு புழக்கத்திலிருந்த கள்ள நோட்டுகளின் மொத்த எண்ணிக்கை 5,22,783 ஆகும். இந்த எண்ணிக்கையை விட 2018-19ஆம் ஆண்டில் மொத்த கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஏனென்றால் 2017-18ஆம் ஆண்டு இருந்த கள்ள நோட்டுகளில் அதிகபட்சமாக பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் கள்ள நோட்டுகள் இருந்தன. இந்த நோட்டுகள் 2018-19ஆம் ஆண்டில் புழக்கத்தில் இல்லாததால் மொத்த கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. எனினும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளில் கள்ள நோட்டுகள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கள்ளநோட்டு

2017

2018

2019

ரூ. 2000

638

17,929

21,847

ரூ.1000

256,324

103,611

717

ரூ. 500 (புதிய)

199

9,892

21,865

ரூ. 500 (பழையது)

317,567

127,918

971

ரூ. 200

-

79

12,728

ரூ100

177,195

239,182

221,218

ரூ.50

9,222

23,447

36,875

மொத்தம்

762,072

522,783

317,384



Next Story