ப.சிதம்பரத்துக்கு 2-ந் தேதி வரை சி.பி.ஐ. காவல் நீட்டிப்பு - தனிக்கோர்ட்டு உத்தரவு


ப.சிதம்பரத்துக்கு 2-ந் தேதி வரை சி.பி.ஐ. காவல் நீட்டிப்பு - தனிக்கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 30 Aug 2019 11:15 PM GMT (Updated: 30 Aug 2019 9:33 PM GMT)

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்துக்கு சி.பி.ஐ. காவலை செப்டம்பர் 2-ந் தேதி வரை நீட்டித்து தனிக்கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது.

புதுடெல்லி,

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி ஐகோர்ட்டு கடந்த 20-ந் தேதி தள்ளுபடி செய்ததை தொடர்ந்து, மறுநாள் இரவில் அவரை டெல்லியில் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்து, கடந்த 22-ந் தேதி ரவுஸ் நிழற்சாலை பகுதியில் உள்ள தனிக்கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். அப்போது ப.சிதம்பரத்தை 5 நாட்கள் சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க தனிக்கோர்ட்டு அனுமதி வழங்கியதை தொடர்ந்து, அவரை தங்கள் தலைமை அலுவலகத்தில் உள்ள விருந்தினர் இல்லத்தில் வைத்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

5 நாள் காவல் முடிவடைந்ததை தொடர்ந்து, கடந்த 26-ந் தேதி மீண்டும் தனிக்கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். அப்போது சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதாடுகையில், ப.சிதம்பரத்திடம் மேலும் பல கேள்விகளை கேட்டு விசாரணை நடத்த வேண்டி இருப்பதால், அவரை மேலும் தங்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதற்கு ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அஜய்குமார் குஹார், ப.சிதம்பரத்துக்கு 30-ந் தேதி வரை சி.பி.ஐ. காவலை நீட்டித்து உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.

ப.சிதம்பரத்தின் காவல் முடிவடைந்ததை தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று அவரை தனிக்கோர்ட்டு நீதிபதி அஜய்குமார் குஹார் முன்னிலையில் ஆஜர்படுத்தினார்கள்.

அப்போது சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.என்.நடராஜ், ப.சிதம்பரத்தை மேலும் 5 நாட்கள் சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரினார்.

அதற்கு நீதிபதி, சி.பி.ஐ. மனுவில் ப.சிதம்பரத்தின் காவலை நீட்டிப்பதற்காக கூறப்பட்டுள்ள காரணங்கள் தெளிவாக இல்லை என்றும், மேலும் இப்படி 5 நாள், 4 நாள், 3 நாள் என்று தனித்தனியாக காவலில் எடுக்க கோருவதற்கு பதிலாக, ஒரேயடியாக 15 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க ஏன் கோரிக்கை விடுக்கப்படவில்லை? என்றும் கேள்வி எழுப்பினார்.

அதற்கு கே.என்.நடராஜ், ஒவ்வொரு நாளும் ப.சிதம்பரத்திடம் பல மணி நேரம் விசாரணை நடத்தியும் கேள்விகளுக்கு அவர் நேரடியாக பதில் அளிப்பது இல்லை என்றும், இதனால் விசாரணையை முடிக்க எத்தனை நாட்கள் தேவைப்படும் என்று உறுதியாக தீர்மானிக்க முடியவில்லை என்றும் கூறினார்.

அப்போது ப.சிதம்பரம் குறுக்கிட்டு, “சி,பி.ஐ. தரப்பும் நாங்களும் காவலை 3 நாட்கள் நீட்டிப்பதற்கு பரஸ்பரம் சம்மதித்து இருக்கிறோம். சி.பி.ஐ. 5 நாட்களுக்கு காவல் நீட்டிப்பு கோரினால் அதனை எதிர்க்குமாறு என்னுடைய வக்கீல்களுக்கு நான் அறிவுறுத்தி இருக்கிறேன். அடிப் படையில் சி.பி.ஐ. காவலை நாங்கள் எதிர்க்கிறோம். வெறுமனே என்னை அவர்கள் காவலில் வைத்துக் கொள்வதற்கு மட்டுமே அப்படி செய்கிறார்கள். 55 மணி நேரம் நடைபெற்ற விசாரணையில் இதுவரை என்னிடம் வெறும் 3 கேள்விகள் மட்டுமே மீண்டும் மீண்டும் கேட்கப்பட்டு உள்ளன” என்றார்.

இதைத்தொடர்ந்து ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் தயான் கிருஷ்ணன் வாதாடுகையில், சி.பி.ஐ. காவலை நீட்டிப்பதை தகுதி அடிப்படையில் தாங்கள் எதிர்ப்பதாகவும், இதுவரை ப.சிதம்பரத்திடம் 3 கோப்புகளை மட்டுமே 20-க்கும் அதிகமான தடவை காட்டி விசாரணை நடத்தி இருப்பதாகவும் கூறினார்.

அத்துடன், கடந்த 22-ந் தேதி இந்த கோர்ட்டு ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனு வருகிற 2-ந் தேதி விசாரணைக்கு வருவதாகவும், அதுவரை அவரை காவலில் வைத்துக் கொள்ளலாம் என்று தாங்களே முன்வந்து கூறுவதாகவும் தெரிவித்தார்.

இதனால் சற்று கோபமடைந்த நீதிபதி, காவல் நீடிப்பு குறித்து நீங்களே முடிவு செய்ய முடியாது என்றும், கோர்ட்டுதான் இதுபற்றி தீர்மானிக்கும் என்றும் கூறினார்.

பின்னர் நீதிபதி அஜய் குமார் குஹார், ப.சிதம்பத்தின் சி.பி.ஐ. காவலை வருகிற செப்டம்பர் 2-ந் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

இதற்கிடையே, ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் அமலாக்கப்பிரிவு தன்னை கைது செய்வதற்கு எதிராக ப.சிதம்பரம் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணை நேற்று முன்தினம் முடிவடைந்ததை தொடர்ந்து, அதன் மீதான உத்தரவு வருகிற 5-ந் தேதி பிறப்பிக்கப்பட இருக்கிறது.


Next Story