பாபர் மசூதி இடிப்பு வழக்கை விசாரிக்கும் தனி நீதிபதியின் பதவிக்காலம் நீட்டிப்பு - சுப்ரீம் கோர்ட்டில் உ.பி. அரசு தகவல்


பாபர் மசூதி இடிப்பு வழக்கை விசாரிக்கும் தனி நீதிபதியின் பதவிக்காலம் நீட்டிப்பு - சுப்ரீம் கோர்ட்டில் உ.பி. அரசு தகவல்
x
தினத்தந்தி 13 Sep 2019 10:30 PM GMT (Updated: 13 Sep 2019 9:43 PM GMT)

பாபர் மசூதி இடிப்பு வழக்கை விசாரிக்கும் தனி நீதிபதியின் பதவிக்காலத்தை நீட்டித்துள்ளதாக, சுப்ரீம் கோர்ட்டில் உத்திரபிரதேச அரசு தகவல் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

பா.ஜனதா மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டோர் மீதான பாபர் மசூதி இடிப்பு வழக்கை உத்தரபிரதேசத்தில் விசாரித்து வரும் தனிக்கோர்ட்டு நீதிபதி சுரேந்திர குமார் யாதவ், இம்மாதம் 30-ந் தேதி ஓய்வு பெறுகிறார்.

ஆனால், இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து, தீர்ப்பு அளிக்கும் வரை தனக்கு பணிநீட்டிப்பு அளிக்குமாறு சுப்ரீம் கோர்ட்டுக்கு சுரேந்திர குமார் யாதவ் கடிதம் எழுதினார். அவரது கோரிக்கை பற்றி பரிசீலிக்குமாறு உத்தரபிரதேச மாநில அரசை கடந்த மாதம் 23-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு கேட்டுக்கொண்டது.

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி ஆர்.எப்.நாரிமன், சூரியகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று இந்த விவகாரம் விசாரணைக்கு வந்தது. உத்தரபிரதேச அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், சுப்ரீம் கோர்ட்டு கூறியபடி, நீதிபதி சுரேந்திர குமார் யாதவின் பணிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதற்கு சுப்ரீம் கோர்ட்டு திருப்தி தெரிவித்ததுடன், இந்த விவகாரத்தை முடித்து வைத்தது.


Next Story