தேசிய செய்திகள்

காஷ்மீரில் இயல்புநிலை திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு + "||" + In Kashmir, default should be taken back - Supreme Court directs Central Government

காஷ்மீரில் இயல்புநிலை திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

காஷ்மீரில் இயல்புநிலை திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
காஷ்மீரில் இயல்புநிலை திரும்ப நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
புதுடெல்லி,

காஷ்மீரில் தகவல் தொடர்பு உள்ளிட்டவற்றுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுபாடுகளை நீக்குமாறு உத்தரவிட கோரி அந்த மாநிலத்தைச் சேர்ந்த பத்திரிகை ஆசிரியர் ஒருவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, எஸ்.ஏ.நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.


மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் விருந்தா குரோவர், காஷ்மீர் மாநிலத்தில் தகவல் தொடர்பு சாதனங்கள் இன்னும் தடை செய்யப்பட்டுள்ளன என்று கூறினார். உடனே நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, மனுதாரர் ஏன் ஐகோர்ட்டை அணுகக்கூடாது? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு மனுதாரர் தரப்பில், அந்த மாநிலத்தில் தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதால் ஐகோர்ட்டை அணுக முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், அங்கு செய்தித்தாள்களுக்கு எவ்வித தடையும் கிடையாது என்றும், அங்கு பல செய்தித்தாள்கள் தினமும் வெளிவருகின்றன என்றும், தூர்தர்ஷன், தனியார் தொலைக்காட்சிகள் பண்பலை வானொலிகள் செயல்படுவதாகவும் கூறினார்.

இந்த வழக்குடன் விசாரிக்கப்பட்ட இதேபோன்ற மற்றொரு வழக்கில் மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் மீனாட்சி அரோரா வாதாடுகையில், காஷ்மீரில் மக்களின் அன்றாட வாழ்க்கை மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்றும், தரைவழி தொலைபேசி இணைப்புகள் மீண்டும் செயல்பட தொடங்கி உள்ளதாக அரசாங்கம் கூறினாலும், மிகவும் குறைந்த அளவே சீரடைந்து இருப்பதாகவும் கூறினார்.

அதற்கு அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் பதில் அளிக்கையில், பாதுகாப்பு ஏற்பாடுகளை கருத்தில் கொண்டு தொலைபேசி தொடர்புகள் துண்டிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து நீதிபதிகள், தேசிய பாதுகாப்பை கருத்தில் கெண்டு காஷ்மீரில் இயல்பு நிலை திரும்ப மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

தேவையான சுகாதாரம் மற்றும் மருத்துவ வசதிகள் பொதுமக்களுக்கு கிடைக்கவும், பள்ளிகள், கல்லூரிகள், பொதுமக்களுக்கான போக்குவரத்து ஆகியவை வழக்க போல் இயங்கவும், தொலைத்தொடர்பு வசதிகள் கிடைக்கும் வகையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவில் அவர்கள் கூறி உள்ளனர். அத்துடன் இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அட்டார்னி ஜெனரலுக்கு உத்தரவிட்டனர்.

குழந்தைகள் உரிமை ஆர்வலர்கள் எனாக்சி கங்குலி, பேராசிரியை சாந்தா சின்கா ஆகியோர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், காஷ்மீரில் 18 வயதுக்கு குறைவான சிறுவர்களும், சிறுமிகளும் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், இது உரிமை மீறல் என்றும் கூறப்பட்டு இருந்தது. இந்த மனுவும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, எஸ்.ஏ.நசீர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

விசாரணை தொடங்கியதும் தலைமை நீதிபதி, இது தொடர்பாக அங்குள்ள ஐகோர்ட்டை ஏன் அணுகவில்லை என்று மனுதாரரின் வக்கீலிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர், காஷ்மீரில் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளால் ஐகோர்ட்டை அணுக முடியவில்லை என்று பதில் அளித்தார்.

அதற்கு தலைமை நீதிபதி, “இது மிகவும் தீவிரத்தன்மை கொண்ட கோரிக்கை அடங்கிய மனுவாக உள்ளது. இதனை நாம் உறுதி செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் நீதி மறுக்கப்பட்டுள்ளது என்றால் நான் நேரடியாக ஐகோர்ட்டு தலைமை நீதிபதியிடம் தொடர்பு கொண்டு பேசுவேன். தேவைப்பட்டால் நானே அங்கு செல்வேன். அதே நேரத்தில் மனுவில் கூறப்பட்டவை சரியானவை அல்ல என்று நிரூபணமானால் மனுதாரர் அதற்கான விளைவை சந்திக்க வேண்டி இருக்கும்” என்று கூறினார்.

கோர்ட்டை அணுக முடியாத சூழ்நிலை இருப்பதாக கூறப்படுவது குறித்து காஷ்மீர் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சுப்ரீம் கோர்ட்டுக்கு அறிக்கை தாக்கல் செய்யவும் தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் எம்.பி. சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தான் 3 முறை காஷ்மீருக்கு செல்ல முயன்றும் அனுமதி கிடைக்கவில்லை என்றும், எனவே அங்கு செல்ல தன்னை அனுமதிக்குமாறு உத்தரவிடவேண்டும் என்றும் கூறி இருந்தார்.

இந்த மனுவும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர், ஜம்மு, பாரமுல்லா, அனந்தநாக் ஆகிய 4 மாவட்டங்களுக்கு மட்டும் செல்லவும், மக்களை சந்திக்கவும் குலாம்நபி ஆசாத்துக்கு அனுமதி வழங்கினார்கள். ஆனால் அரசியல் கூட்டங்கள், பேரணிகள் எதிலும் கலந்து கொள்ளக்கூடாது என்றும் கூறினார்கள்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, ‘ஜம்மு-காஷ்மீர் மக்கள் மாநாடு’ என்ற கட்சி தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நேற்று விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.


தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: இந்தியாவுக்குள் ஊடுருவ மேலும் 300 பேர் காத்திருப்பதாக தகவல்
காஷ்மீரில் 2 பயங்கரவாதிகளை ராணுவ வீரர்கள் சுட்டுக்கொன்றனர். இதுதவிர பாகிஸ்தான் எல்லையில் 300 பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைய காத்திருப்பதாக ராணுவ அதிகாரி தெரிவித்தார்.
2. காஷ்மீரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
3. காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
4. காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
5. காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் வீரமரணம்
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.