இரு மாநில நதிநீர் பிரச்சினைகளை தீர்க்க 5 பேர் கொண்ட குழு அமைக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்


இரு மாநில நதிநீர் பிரச்சினைகளை தீர்க்க 5 பேர் கொண்ட குழு அமைக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்
x
தினத்தந்தி 25 Sep 2019 11:40 AM GMT (Updated: 25 Sep 2019 11:49 AM GMT)

நதிநீர் விவகாரங்கள் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இடையே திருவனந்தபுரத்தில் பேச்சுவார்த்தை முடிந்தது.

திருவனந்தபுரம்

கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழகம் வந்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம், கேரளா, தமிழகம் இடையேயான நதிநீர் பிரச்சினையை பேசி தீர்க்க முன்வர வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்தார். இதனை பினராயி விஜயனும் ஏற்றுக் கொண்டார். இதன்படி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் திருவனந்தபுரத்தில் உள்ள மஸ்கட் நட்சத்திர ஓட்டலில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னையில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரத்துக்கு காலை புறப்பட்டுச் சென்றார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பரம்பிகுளம்-ஆழியாறு உள்ளிட்ட நதிநீர் விவகாரங்கள் குறித்து பினராயி விஜயனுடன் பேச இருப்பதாகவும், இதில் நல்ல முடிவு கிடைக்கும் என நம்புவதாகவும் கூறினார்.

இதையடுத்து விமானம் மூலம் திருவனந்தபுரத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்றடைந்தார்.  திருவனந்தபுரம் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவர் தங்கியிருந்த இடத்திற்கு சென்று கேரள முதல்வர் பினராயி விஜயன் நேரில் சந்தித்தார். அப்போது மலர் கொத்தும், சால்வையும் போர்த்தி வரவேற்றார்.

இரு மாநில குழுவினருக்கும் இடையே பேச்சு வார்த்த்தை நடைபெற்றது. 

 தமிழக அரசு தரப்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், தலைமை செயலாளர் சண்முகம், முதலமைச்சரின் செயலாளர் சாய்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கேரளா மாநில அரசு சார்பில் முதலமைச்சர் பினராயி விஜயன், நீர்வளத்துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி, மின்சாரத்துறை அமைச்சர் மணி, வனத்துறை அமைச்சர் ராஜு ஆகியோர்கலந்து கொண்டனர்.

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை அதிகரிக்கும் விவகாரம், பரம்பிகுளம் -ஆழியாறு மற்றும் பாண்டியாறு - புன்னம்புழா ஆறுகளில் தண்ணீர் விடுவது, புதிய நீர்மின் திட்டங்கள் உருவாக்குவது, கேரளாவில் கடலில் கலக்கும் உபரி நதி நீரை தமிழகத்திற்கு திருப்புவது உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

பேச்சுவார்த்தை முடிவடைந்ததும் இரு மாநில முதல் அமைச்சர்களும் கூட்டாக பேட்டி அளித்தனர்.

பினராய் விஜயன் கூறும் போது:-

இரு மாநில  நதிநீர் பிரச்சினைகளை தீர்க்க 5 பேர் கொண்ட குழு அமைக்கப்படும்.  ஒரு வாரத்திற்குள் இந்த குழு அமைக்கப்படும்.   6 மாதங்களுக்கு  ஒருமுறை இரு மாநில தலைமைச்செயலாளர்களும் சந்தித்து ஆலோசனை நடத்துவார்கள். நதி நீர் பிரச்சினைகளுக்கு நல்ல முறையில் தீர்வு காணப்படும் என கூறினார்.

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது;-

15 ஆண்டுகளுக்கு பிறகு  தமிழகமும், கேரளாவும் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளன.  பரம்பிக்குளம், ஆழியாறு  நீரை பங்கிட்டு கொள்வது தொடர்பாக 2 மாநிலங்களிலும்  5 பேர் கொண்ட குழு அமைக்கப்படும்.  இரு மாநிலங்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்படாதவாறு நீரை பங்கீட குழு அமைக்கப்பட உள்ளது. பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண இரு மாநிலமும் முடிவு செய்து உள்ளன என கூறினார்.

2004 ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, அப்போதைய கேரள முதல்வர் உம்மன்சாண்டியை சென்னையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்த நிலையில், மீண்டும் இரு மாநில முதலமைச்சர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story