மேலும் 9 வங்கிகள் மூடப்படுகிறதா? - ரிசர்வ் வங்கி விளக்கம்


மேலும் 9 வங்கிகள் மூடப்படுகிறதா? - ரிசர்வ் வங்கி விளக்கம்
x
தினத்தந்தி 25 Sep 2019 8:45 PM GMT (Updated: 25 Sep 2019 7:44 PM GMT)

மேலும் 9 வங்கிகள் மூடப்படுகிறதா என்பது குறித்து ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.

மும்பை,

10 பொதுத்துறை வங்கிகளை இணைக்கப்போவதாக மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி அதிகாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்தனர். பேச்சுவார்த்தைக்கு பின்னர் வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

இந்தநிலையில் 9 வணிக வங்கிகளை ரிசர்வ் வங்கி மூடப்போவதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவியது. எனவே வாடிக்கையாளர்கள் அந்த வங்கிகளில் உள்ள தங்களது பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த தகவலை ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது.

இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘9 வணிக வங்கிகளை ரிசர்வ் வங்கி மூடப்போகிறது என்று சமூக வலைத்தளத்தில் பரவும் தகவல் தவறானவை’’ என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

மத்திய நிதித்துறை செயலாளர் ராஜீவ் குமார், சமூக வலைத்தள செய்தியை ‘குறும்புக்காரர்’ என்று வர்ணித்தார். மேலும் அவர் கூறுகையில், ‘‘சில வங்கிகளை ரிசர்வ் வங்கி மூடப்போகிறது என்று வரும் தகவல் தவறானது. வங்கிகள் மூடப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை. வங்கிகளை வலுப்படுத்தவே சில சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன’’ என்றார்.


Next Story