செவ்வாயை சுற்றி வரும் மங்கள்யான் விண்கலம் 5 ஆண்டுகளை நிறைவு செய்தது


செவ்வாயை சுற்றி வரும் மங்கள்யான் விண்கலம் 5 ஆண்டுகளை நிறைவு செய்தது
x
தினத்தந்தி 25 Sep 2019 10:45 PM GMT (Updated: 25 Sep 2019 9:24 PM GMT)

செவ்வாய் கிரகத்தை சுற்றி வருகிற மங்கள்யான் விண்கலம் 5 ஆண்டுகளை நிறைவு செய்தது. இன்னும் ஓராண்டு காலம் அது செவ்வாயை சுற்றும் என தெரிய வந்துள்ளது.

புதுடெல்லி,

செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக மங்கள்யான் என்ற விண்கலம் (ஆர்பிட்டர் மிஷன்) பி.எஸ்.எல்.வி- சி25 ராக்கெட் மூலம் சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் 5-ந் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.

இதன் மூலம் முதல் முயற்சியிலேயே செவ்வாய்க்கு விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பிய முதல் நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைத்தது.

சுமார் 10 மாத காலத்துக்கு பின்னர் அது 2014-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 24-ந் தேதி செவ்வாயின் சுற்றுப்பாதையை சென்றடைந்தது. தற்போது செவ்வாய் கிரகத்தை சுற்றி வருகிறது. இந்த விண்கலம், 6 மாத கால ஆயுளுடன் வடிவமைக்கப்பட்டது. ஆனால் அது 5 ஆண்டு காலத்தை வெற்றிகரமாக கடந்து விட்டது.

இதுபற்றி இஸ்ரோ தலைவர் கே. சிவன் கூறுகையில், “ ஆரம்பத்தில் 6 மாதத்துக்கு என்றுதான் மங்கள்யான் வடிவமைக்கப்பட்டது. ஆனால் அது 5 ஆண்டுகளை நிறைவு செய்து விட்டது. தொடர்ந்து அது தன் பணியை செய்து கொண்டிருக்கிறது. படங்களை அனுப்பி வருகிறது. இன்னும் சில காலம் அது தனது பணியை தொடரும்” என கூறினார்.

செவ்வாய் கிரகத்தில் தூசி புயல்கள் நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் உயரம் வரை செல்லக்கூடும் என்பது இந்த திட்டத்தின் வாயிலாக காணப்பட்ட முக்கிய முடிவு என்று இஸ்ரோவின் முன்னாள் தலைவர் ஏ.எஸ். கிரண் குமார் கூறினார்.

மங்கள்யான் திட்டத்தின் செலவு வெறும் ரூ.450 கோடி மட்டுமே. இது ஹாலிவுட் படமான ‘கிரேவிட்டி’யின் பட்ஜெட்டை விட குறைவான செலவு என்பது முக்கியத்துவம் பெறுகிறது.

இவ்வளவு குறைந்த செலவில், செவ்வாய் கிரகத்துக்கு விண்கலத்தை அனுப்ப முடியும் என்பதற்கு இந்தியா இதன்மூலம் முன்மாதிரி நாடு ஆகி இருக்கிறது.

மங்கள்யான் இன்னும் ஓராண்டு காலம் செவ்வாயை சுற்றி வரும் வாய்ப்பு உள்ளதாக ஏ.எஸ். கிரண்குமார் தெரிவித்தார்.

மங்கள்யான்-2 திட்டம் பற்றி இஸ்ரோ தலைவர் கே. சிவனிடம் கேட்டபோது, அவர், “அது தொடர்பான பணிகள் நடந்து வருகின்றன. ஆனால் இன்னும் முடிவு எடுக்கவில்லை” என்று பதில் அளித்தார்.


Next Story