பாஜகவுக்கு ஆதரவு அளிக்கும் எண்ணம் இல்லை - துஷ்யந்த் சவுதாலா


பாஜகவுக்கு ஆதரவு அளிக்கும் எண்ணம் இல்லை - துஷ்யந்த் சவுதாலா
x
தினத்தந்தி 25 Oct 2019 6:55 AM GMT (Updated: 25 Oct 2019 10:04 AM GMT)

பாஜகவுக்கு ஆதரவு அளிக்கும் எண்ணம் எதுவும் இல்லை என்று அரியானாவில் கிங்மேக்கராக உருவெடுத்துள்ள துஷ்யந்த் சவுதாலா தெரிவித்துள்ளார்.

சண்டிகார்,

அரியானா மாநில சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 90 தொகுதிகள் கொண்ட அரியானாவில் ஆட்சியமைக்க 46 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 

பாஜக 40 தொகுதிகளைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உள்ளது. காங்கிரஸ் 31 தொகுதிகளில் வென்றது.  துஷ்யந்த் சவுதாலா தலைமையிலான ஜனநாயக் ஜனதா கட்சி 10 தொகுதிகளை பிடித்து, மூன்றாவது பெரும் கட்சியாக உள்ளது. சுயேட்சைகள் 7 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். மாநிலத்தில் யார் ஆட்சியமைப்பது என்பதை முடிவு செய்யும் கிங் மேக்கராக துஷ்யந்த் சவுதாலா பார்க்கப்படுகிறார். இதேபோல் 7 சுயேட்சைகளின் பங்கும் முக்கியமானது.  ஜனநாயக் ஜனதா கட்சி பாஜகவுக்கு ஆதரவு அளிக்குமா?, காங்கிரசுக்கு ஆதரவு அளிக்குமா? என்பது உறுதியாகத் தெரியவில்லை. 

இந்த சூழலில், இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில்,  பாஜகவுக்கு ஆதரவு அளிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று துஷ்யந்த் சவுதாலா தெரிவித்துள்ளார். மேலும், ஆதரவு கேட்டு பாஜகவினர் யாரும் தன்னை இதுவரை தொடர்பு கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  இதற்கிடையே, 7 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க பாஜக தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

Next Story