காஷ்மீர் செல்லும் முன் ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு பிரதமர் மோடியை சந்தித்தது


காஷ்மீர் செல்லும் முன் ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு பிரதமர் மோடியை சந்தித்தது
x
தினத்தந்தி 28 Oct 2019 10:20 AM GMT (Updated: 28 Oct 2019 10:20 AM GMT)

ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு நாளை ஜம்மு காஷ்மீரை பார்வையிட உள்ளது. முன்னதாக இன்று பிரதமர் மோடியை சந்தித்தது.

புதுடெல்லி,

கடந்த ஆகஸ்ட் 5 ம் தேதி, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு  சிறப்பு அந்தஸ்து வழங்கும்  370 வது பிரிவு ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து  மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் மத்திய அரசு  பிரித்தது. இதை தொடர்ந்து காஷ்மீரில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இந்த நிலையில் அக்டோபர் 29 ம் தேதி காஷ்மீர் வருவதற்கு முன்னதாக ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு  இன்று புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசியது.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் இந்திய அரசியலமைப்பின் 370 வது பிரிவை  மத்திய அரசு ரத்து செய்த பின்னர் காஷ்மீரின் நிலைமை குறித்து  ஐரோப்பிய நாடாளுமன்ற எம்பிக்கள் மோடியுடன் விவாதித்தனர்.

ஆனால் இது,  ஐரோப்பிய பாராளுமன்றத்தின் அதிகாரப்பூர்வ பயணம் அல்ல என்றும்,  ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் பயணம் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தூதுக்குழு இன்று மாலை துணை ஜனாதிபதி வெங்கய்யாநாயுடுவை சந்திக்கிறது. நாளை காஷ்மீருக்கு செல்லும் முன்  தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலையும் சந்திக்க உள்ளது.

இந்தியாவுடனான உறவுக்கு முக்கியத்துவம் அளித்த ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் மோடி ட்வீட் மூலம் நன்றி தெரிவித்துள்ளார். இந்த பயணத்தினால் பிரதிநிதிகள் குழுவினர் பிராந்தியத்தின் கலாச்சார மற்றும் மத பன்முகத்தன்மை குறித்து நன்கு புரிந்து கொள்ள வேண்டும் என கூறினார்.


Next Story