எங்களிடம் 162 எம்.எல்.ஏக்கள் உள்ளனர் ; இன்று இரவு ஓட்டலில் அணிவகுக்கிறோம் -சஞ்சய் ராவத்


எங்களிடம் 162 எம்.எல்.ஏக்கள் உள்ளனர் ; இன்று இரவு ஓட்டலில்  அணிவகுக்கிறோம் -சஞ்சய் ராவத்
x
தினத்தந்தி 25 Nov 2019 12:22 PM GMT (Updated: 25 Nov 2019 1:48 PM GMT)

தங்களுக்கு போதுமான பலம் இருப்பதாக கவர்னரிடம் நிரூபிக்கும் வகையில் இன்று 162 எம்.எல்.ஏக்கள் ஓட்டலில் அணிவகுப்பு நடத்துகின்றனர் என சஞ்சய் ராவத் கூறினார்.

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி அரசு அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்த  நிலையில், சனிக்கிழமை அதிகாலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரியாகவும், தேசியவாத காங்கிரஸ்  கட்சியின் சட்டசபை கட்சி தலைவர் அஜித் பவார் துணை முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்று கொண்டனர். இதனால் தேசியவாத காங்கிரசில் பிளவு  ஏற்பட்டது.

 சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில்  ‘ரிட்’ வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு மீது, நாளை காலை 10.30 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்  அறிவித்துள்ளது.

இதற்கிடையில்  தங்கள் கூட்டணிக்கு ஆதரவு அளிக்கும் எம்.எல்.ஏக்கள்  கடிதத்தை கவர்னர்  மாளிகையில் 3 கட்சிகளின் மூத்த தலைவர்களும்  சமர்பித்துள்ளனர். சிவசேனா 63, காங்கிரஸ் 44, தேசியவாத காங்கிரஸ் 51 என மொத்தம் 162  எம்.எல்.ஏக்களின் கையெழுத்துடன் ஆதரவு கடிதம்  சமர்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. சமாஜ்வாதி கட்சியின் 2 எம்.எல்.ஏக்களும் சிவசேனா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து  கையெழுத்திட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

தங்களுக்கு போதுமான பலம் இருப்பதை கவர்னரிடம் நிரூபிக்கும் வகையில் இன்று இந்த எம்.எல்.ஏக்கள் அணிவகுப்பு நடத்துகின்றனர்.

இது குறித்து சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியதாவது:-

நாங்கள் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம். சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங். அணிகளின் 162 எம்எல்ஏக்களும் பேரணியாக மும்பையில் உள்ள கிராண்ட் ஹையாட் ஓட்டலில் இன்று இரவு 7 மணிக்கு அணிவகுக்கிறோம் என கூறினார்.

Next Story