தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சந்தித்தார் அஜித்பவார்


தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சந்தித்தார் அஜித்பவார்
x
தினத்தந்தி 26 Nov 2019 5:36 PM GMT (Updated: 26 Nov 2019 5:36 PM GMT)

மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை அவரது வீட்டில் அஜித்பவார் சந்தித்தார்.

மும்பை,

மராட்டியத்தில் பெரும்பான்மை இல்லாத நிலையில் தேசியவாத காங்கிரஸ்  மூத்த தலைவர் அஜித் பவார் ஆதரவுடன் பா.ஜனதாவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரியாக பதவியேற்றார்.

இதை எதிர்த்து  சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில்  மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது இன்று சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது. மராட்டிய சட்டசபையில் நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும். வாக்குச்சீட்டு முறையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி, அதனை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று  சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

இதனைத்தொடர்ந்து மகாராஷ்டிராவின் துணை முதல்-மந்திரி பதவியில் இருந்து அஜித் பவார் ராஜினாமா செய்தார். அவரை தொடர்ந்து அம்மாநில முதல்-மந்திரியாக இருந்த தேவேந்திர பட்னாவிசும் ராஜினாமா செய்தார். இதனால் மகாராஷ்டிரா அரசியலில் மாபெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பா.ஜனதாவுடன் கூட்டணிவைத்து துணை முதல்-மந்திரி பதவியேற்ற அஜித் பவார், தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் இன்று திடீரென தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாரை நேரில் சந்தித்து பேசினார். இதன் மூலம் மீண்டும் அவர் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர்களுடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே மும்பையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது.  இந்த 3 கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தலைவராக உத்தவ் தாக்கரே தேர்வு செய்யப்பட்டார். அதைதொடர்ந்து மாநில முதல்-மந்திரியாக உத்தவ் தாக்கரே ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.  மேலும் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் இடையே கூட்டணி எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து உத்தவ் தாக்கரே வரும் டிசம்பர் ஒன்றாம் தேதி முதல்-மந்திரியாக பதவியேற்க உள்ளார். இந்நிலையில் மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை ராஜிவ் பவனில் சென்று உத்தவ் தாக்கரே சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளார். 

Next Story