“சொல் ஒன்றாகவும், செயல் வேறாகவும் உள்ளது” - அரசியல் சாசனத்தை மோடி பாராட்டியதற்கு மன்மோகன் சிங் கிண்டல்


“சொல் ஒன்றாகவும், செயல் வேறாகவும் உள்ளது” - அரசியல் சாசனத்தை மோடி பாராட்டியதற்கு மன்மோகன் சிங் கிண்டல்
x
தினத்தந்தி 26 Nov 2019 10:30 PM GMT (Updated: 26 Nov 2019 8:29 PM GMT)

அரசியல் சாசனத்தை பிரதமர் மோடி பாராட்டியதற்கு, சொல் ஒன்றாகவும், செயல் வேறாகவும் உள்ளதாக மன்மோகன் சிங் கிண்டல் செய்தார்.

புதுடெல்லி,

மராட்டியத்தில் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி அரசு இன்று (புதன்கிழமை) சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இதற்கிடையே நாடாளுமன்றத்தில் அரசியல் சாசனத்தை உருவாக்கியதின் 70-வது ஆண்டு விழாவையொட்டி இரு சபைகளின் கூட்டு கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி அரசியல் சாசனத்தை வெகுவாக புகழ்ந்தார். அப்போது அவர், “அரசியல் சாசனம் எங்களுக்கு புனித நூல். இது நம் வாழ்க்கை, நமது சமூகம், நமது மரபுகள் மற்றும் நம்பிக்கைகள் மற்றும் புதிய சவால்களுக்கான தீர்வுகளையும் கொண்ட புத்தகம்” என்றார்.

நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தை மராட்டிய விவகாரத்தையொட்டி, எதிர்க்கட்சிகள் புறக்கணித்து, நாடாளுமன்ற வளாகத்தில் அம்பேத்கர் சிலை முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தின.

அப்போது காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் நிருபர்களை சந்தித்தார்.

அவர் பிரதமர் மோடி அரசியல் சாசனத்தை பாராட்டியதை கிண்டல் செய்யும் வகையில், “சொல் ஒன்றாகவும், செயல் வேறாகவும் உள்ளதே. மராட்டியத்தில் மத்திய அரசு நடந்து கொண்ட விதம், அரசியல் சாசன விதிமுறைகள் பாதுகாப்பானவை என்பதற்கு உறுதி அளிப்பதாக இல்லை” என கூறினார்.


Next Story