புதிய மாவட்டங்களில் வார்டு மறுவரையறை பணிகளை முடிக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல்


புதிய மாவட்டங்களில் வார்டு மறுவரையறை பணிகளை முடிக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல்
x
தினத்தந்தி 29 Nov 2019 11:15 PM GMT (Updated: 29 Nov 2019 9:25 PM GMT)

உள்ளாட்சி தேர்தல் தேதியை அறிவிக்கும் முன்பு, புதிய மாவட்டங்களில் வார்டு மறுவரையறை பணிகளை முடிக்க உத்தரவிடவேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.

புதுடெல்லி,

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை காலம் தாழ்த்தாமல் உடனடியாக நடத்தும் வகையில் அறிவிப்பாணை வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கக் கோரி வக்கீல் ஜெயசுகின் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு வருகிற டிசம்பர் 13-ந் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பாணையை வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பித்தது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் 2011-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் வார்டுகள் மறுவரையறை செய்து, சுழற்சி முறை இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்றும், தேர்தல் பணிகளை மாநில அரசு ஊழியர்களிடம் ஒப்படைக்காமல் மத்திய அரசு ஊழியர்களை கொண்டு தேர்தல் நடத்த வேண்டும் என்றும் கோரி ஏற்கனவே கடந்த 2016-ம் ஆண்டு தி.மு.க. தரப்பில் தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து தி.மு.க. நேற்றுமுன்தினம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து உள்ளது.

இந்த மனுவையும், வக்கீல் ஜெயசுகின் தாக்கல் செய்த மனுவுடன் டிசம்பர் 13-ந் தேதி விசாரிப்பதாக சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்து இருக்கிறது.

இந்த நிலையில், காஞ்சீபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாரியப்பன், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த உமாபதி உள்ளிட்ட 6 பேர் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்து உள்ளனர்.

அந்த மனுக்களில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் இன்னும் வார்டு மறுவரையறை நடத்தப்படவில்லை. எனவே தற்போது உள்ளாட்சி தேர்தலை நடத்தினால் பல்வேறு குழப்பங்கள் ஏற்படும். புதிதாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு உள்ளதால் தொகுதி குறித்த தெளிவான விவரங்களை அரசு வெளியிடவில்லை. இதனால் பல குழப்பங்கள் நிலவி வருகிறது.

எனவே உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பை வெளியிடும் முன்பு புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் வார்டு மறுவரையறை பணிகளை முடிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுக்களில் கூறப்பட்டு உள்ளது.

இந்த மனுக்களை அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும் என்று, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு முன்பு நேற்று முறையிடப்பட்டது.

ஆனால் தலைமை நீதிபதி, இந்த மனுக்களை விசாரணைக்கு பட்டியலிடுமாறு பதிவாளர் அலுவலகத்துக்கு உத்தரவு பிறப்பித்தார். விசாரணைக்கான தேதி எதையும் அவர் குறிப்பிடவில்லை.

இதே கோரிக்கையை வலியுறுத்தி தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி தீபக் குப்தா அமர்வில் நேற்று காலை முறையிடப்பட்டது. அதற்கு, இது தொடர்பாக தலைமை நீதிபதி அமர்வில் முறையிடுமாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து மூத்த வக்கீல் அபிஷேக் சிங்வி, தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே அமர்வில், தி.மு.க.வின் மனுவை அவசர வழக்காக கருதி விசாரிக்குமாறு முறையிட்டார்.

அதற்கு தலைமை நீதிபதி, தி.மு.க.வின் மனுவை விசாரணைக்கு ஏற்பதாகவும், ஆனால் பட்டியலிடப்பட்ட பிறகு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.


Next Story