ரகசிய வாக்கெடுப்பு நடத்தினால் உத்தவ் தாக்கரே நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற முடியாது: பாஜக சவால்


ரகசிய வாக்கெடுப்பு நடத்தினால் உத்தவ் தாக்கரே நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற முடியாது: பாஜக சவால்
x
தினத்தந்தி 30 Nov 2019 6:36 AM GMT (Updated: 30 Nov 2019 6:36 AM GMT)

ரகசிய வாக்கெடுப்பு நடத்தினால் உத்தவ் தாக்கரே நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற முடியாது என்று பாஜக தெரிவித்துள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் பல்வேறு அரசியல் குழப்பங்களுக்கு பிறகு சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது. முதல்-மந்திரியாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று முன்தினம் பதவி ஏற்றார். அவருடன் 3 கட்சிகளை சேர்ந்த 6 பேர் மந்திரிகளாக பதவி ஏற்றனர்.

கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி வருகிற 3-ந் தேதிக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தவ் தாக்கரே அரசுக்கு உத்தரவிட்டு  உள்ளார். இந்த நிலையில் சட்டசபை இன்று (சனிக்கிழமை) கூடுவதாகவும், பிற்பகலில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தனது அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கோர இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

288 உறுப்பினர்களை கொண்ட சட்டசபையில் அரசு வெற்றி பெற 145 எம்.எல்.ஏ.க்கள் தேவை என்ற நிலையில், சிவசேனா தலைமையிலான கூட்டணி தங்களிடம் 166 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக கூறி உள்ளது. இதனால் அரசு வெற்றி பெறுவதில் எந்த சிக்கலும் இருக்காது என கருதப்படுகிறது. இதற்கிடையே இன்று சட்டசபையை நடத்தும் வகையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திலிப் வல்சே பாட்டீல் தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டு உள்ளார். 
 
நம்பிக்கை வாக்கெடுப்புக்காக இன்று பிற்பகல் 2 மணியளவில்  மராட்டிய சட்டமன்றம் கூடுகிறது. இந்த நிலையில், மராட்டிய பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சந்திரகாந்த் பாடீல், நம்பிக்கை வாக்கெடுப்பை ரகசியமான முறையில் நடத்தினால், அவர்களால் வெற்றி பெற முடியாது. இதனை நான் வெளிப்படையாக சவாலாகவே விடுக்கிறேன்” என்றார். 

Next Story