சூரிய கிரகணம்; மனநலம் பாதித்த குழந்தைகளை மண்ணில் புதைத்ததில் சிறுமி மயக்கம்


சூரிய கிரகணம்; மனநலம் பாதித்த குழந்தைகளை மண்ணில் புதைத்ததில் சிறுமி மயக்கம்
x
தினத்தந்தி 26 Dec 2019 11:21 AM GMT (Updated: 26 Dec 2019 11:21 AM GMT)

சூரிய கிரகணத்தினை முன்னிட்டு, மனநலம் பாதித்த தங்கள் குழந்தைகள் நலம் பெற அவர்களை கழுத்து வரை பெற்றோர் மண்ணில் புதைத்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

கலபுரகி,

தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரள மாநிலம் பாலக்காடு, கொச்சி உள்பட தென்னிந்தியா முழுவதும் இன்று சூரிய கிரகணம் தென்பட்டது.  சூரியனின் மையப்பகுதியை நிலவு 3 நிமிடங்களுக்கு மேல் மறைத்த‌து.  இதனை முன்னிட்டு பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு சூரிய ஒளியை கட்டுப்படுத்தும் திறன் கொண்ட கண்ணாடிகளை வழங்கினர்.  அதன் வழியே அவர்கள் இந்த அரிய நிகழ்வை கண்டு களித்தனர்.

ஆனால் கர்நாடகாவில் சில பெற்றோர் மனநலம் பாதித்த தங்களது குழந்தைள் நலம் பெறுவார்கள் என்ற நம்பிக்கையில் அவர்களை கழுத்துவரை மண்ணுக்குள் புதைத்த அதிர்ச்சி சம்பவமும் நடந்துள்ளது.

கர்நாடகாவின் கலபுரகியில் தாஜ்சுல்தான்பூர் கிராமத்தில் வசித்து வரும் பெற்றோர் சிலர் தங்களது மனநலம் பாதித்த குழந்தைகளை கழுத்துவரை மண்ணுக்குள் புதைத்து உள்ளனர்.  ஒரு சிலர் ஆடுகளின் கழிவுகள் நிறைந்த மண்ணிலும் தங்களது குழந்தைகளை கழுத்துவரை புதைத்துள்ளனர்.

இதனால் அவர்கள் நலம் பெறுவர் என்பது அவர்களின் நம்பிக்கையாக உள்ளது.  இதேபோன்று மொத்தம் 3 குழந்தைகள் புதைக்கப்பட்டு இருந்தனர்.  ஆனால் அவர்களில் 4 வயது சிறுமியான சஞ்சனா சுயநினைவு இழந்து மயங்கி உள்ளார்.  இதனை அறிந்த உள்ளூர் தன்னார்வலர்கள் சிலர் சிறுமியை உடனடியாக மீட்டனர்.  அந்த சிறுமியால் உட்காரவோ அல்லது ஓரிடத்தில் இருந்து வேறிடத்திற்கு நகரவோ முடியவில்லை.

8 மற்றும் 11 வயது கொண்ட மற்ற இரு சிறுவர்களாலும் நகர்ந்து செல்ல முடியவில்லை.  இதுபோன்ற மூட நம்பிக்கைகள் தீர்வு தராது என பெற்றோரிடம் அவர்கள் எடுத்து கூற முயற்சித்துள்ளனர்.  ஏழ்மை நிலையில் உள்ள அவர்கள் லட்சக்கணக்கில் மருத்துவமனையில் செலவு செய்தும் குழந்தைகளை குணப்படுத்த முடியவில்லை.  அதனால் இந்த முடிவை எடுத்துள்ளனர்.  அவர்களை துன்புறுத்துவதற்காக இதனை செய்யவில்லை என்றும் அவர்கள் நன்றாக வரவேண்டும் என்பதற்காகவே இதனை செய்தோம் என்றும் பெற்றோர் பதிலளித்து உள்ளனர்.

ஆனால் இந்த சம்பவம் நடப்பது முதன்முறையல்ல. இதுபோன்ற பல சம்பவங்கள் இதற்கு முன்பும் கலபுரகியில் நடந்துள்ளன.  ஆனால் அவை ஊடக கவனத்திற்கு வரவில்லை.

Next Story