டெல்லியில் ஆட்சிக்கு வந்தால் தண்ணீர், மின்சார கட்டணமாக ஒரு ரூபாய்; பா.ஜ.க. எம்.பி. பிரசாரம்


டெல்லியில் ஆட்சிக்கு வந்தால் தண்ணீர், மின்சார கட்டணமாக ஒரு ரூபாய்; பா.ஜ.க. எம்.பி. பிரசாரம்
x
தினத்தந்தி 13 Jan 2020 5:30 PM GMT (Updated: 13 Jan 2020 5:12 PM GMT)

டெல்லியில் ஆட்சிக்கு வந்தால் ஏழைகளிடம் இருந்து தண்ணீர் மற்றும் மின்சார கட்டணமாக வெறும் ஒரு ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படும் என பா.ஜ.க. எம்.பி. பர்வேஷ் வர்மா அறிவித்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் பிப்ரவரி மாதம் 22-ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, புதிய அரசை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், பிப்ரவரி 8-ம் தேதி டெல்லி சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 11-ம் தேதி நடைபெறுகிறது. இம்மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சியை தக்க வைக்க முனைப்பு காட்டுகிறது. அதேநேரத்தில் பா.ஜ.க. ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் படுதீவிரமாக உள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சி எப்படியாவது கவுரவமான வெற்றியைப் பெற விரும்புகிறது. இதனால் டெல்லி தேர்தல் களம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையில், பல்வேறு கட்சிகளும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில் பா.ஜ.க. எம்.பி. பர்வேஷ் வர்மா முக்கிய இடங்களில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது அவர் தேர்தல் வாக்குறுதியாக கூறுகையில்,‘‘டெல்லியில் ஏழைகளுக்கு தண்ணீர் மற்றும் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என ஆம் ஆத்மி அறிவித்து பதவிக்கு வந்தது. ஆனால் 5 ஆண்டுகள் பதவியில் இருந்தும் இதனை நடைமுறைபடுத்தவில்லை.

ஆனால், டெல்லியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் ஏழைகளிடம் இருந்து தண்ணீர் மற்றும் மின்சார கட்டணமாக வெறும் ஒரு ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படும். இதனை கட்சியின் தேர்தல் வாக்குறுதியாக அறிவிப்போம். தேர்தல் அறிக்கையில் இதனை சேர்க்கக்கோரி தேர்தல் அறிக்கை கமிட்டியிடம் பரிந்துரைத்துள்ளேன்’’ எனக் கூறினார்.


Next Story