போராட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வெடிகுண்டுகளை வீசியது; காங்கிரஸ் எம்.பி. குற்றச்சாட்டு


போராட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வெடிகுண்டுகளை வீசியது; காங்கிரஸ் எம்.பி. குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 29 Jan 2020 11:54 AM GMT (Updated: 29 Jan 2020 11:54 AM GMT)

அமைதியான போராட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் வெடிகுண்டுகளை வீசி வன்முறையில் ஈடுபட்டனர் என காங்கிரஸ் எம்.பி. ரஞ்சன் சவுத்ரி கூறினார்.

மூர்ஷிதாபாத்,

நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு ஆதரவாகவும் மற்றும் எதிர்ப்பு தெரிவித்தும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

மேற்கு வங்காளத்தில் போராட்டக்காரர்கள் இடையே நடந்த மோதலில் 2 பேர் பலியாகி உள்ளனர். 15 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனிருத் பிஸ்வாஸ் மற்றும் மக்பூல் ஷேக் என இன்று அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.

இந்த போராட்டங்களில் கார்கள், பைக்குகள் உள்ளிட்ட வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. பல இடங்களில் கடைகள் மீது தாக்குதல்கள்  நடத்தப்பட்டன. இதனால் கடைகள் அடைக்கப்பட்டன. இது பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை பாதித்தது.

இதுபற்றி மூர்ஷிதாபாத் தொகுதி காங்கிரஸ் கட்சி எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, ஷாஹேப்நகர் பகுதி மக்கள் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

திடீரென, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் அவர்கள் மீது வெடிகுண்டுகளை வீசி எறிந்தனர்.  இந்த சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டார்.  4 பேர்  படுகாயமடைந்தனர்.  அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என கூறினார்.

Next Story