தொலைநோக்கு பார்வையும், செயல் திட்டங்களும் நிறைந்த பட்ஜெட் - பிரதமர் மோடி பாராட்டு


தொலைநோக்கு பார்வையும், செயல் திட்டங்களும் நிறைந்த பட்ஜெட் - பிரதமர் மோடி பாராட்டு
x
தினத்தந்தி 1 Feb 2020 11:30 PM GMT (Updated: 2 Feb 2020 6:46 AM GMT)

மத்திய பட்ஜெட்டில் தொலைநோக்கு பார்வையும், செயல் திட்டங்களும் நிறைந்துள்ளன எனவும், இதன் மூலம் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் எனவும் பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

புதுடெல்லி,

2020-21-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட், ‘குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச நிர்வாகம்’ என்ற அரசின் உறுதிப்பாட்டுக்கு வலுசேர்க்கும் வகையில் அமைந்திருப்பதாக பிரதமர் மோடி பாராட்டி உள்ளார்.

இது தொடர்பாக அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷனில் உரையாற்றும்போது அவர் கூறியிருப்பதாவது:-

மத்திய பட்ஜெட் வேளாண்மை, உள்கட்டமைப்பு, ஜவுளி, தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் வேலைவாய்ப்பை உருவாக்குவதை முக்கியமாக கொண்டு தயாரிக்கப்பட்டு உள்ளது. வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்காக இந்த 4 முறைகளுக்கும் அதிகபட்ச முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது.

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் அனைத்தும் நாட்டில் வேலைவாய்ப்பை அதிகரிப்பதுடன் விவசாயிகளின் வருமானத்தையும் இரட்டிப்பாக்கும். அந்தவகையில் தொலைநோக்கு பார்வையும், செயல்திட்டங்களும் நிறைந்த பட்ஜெட் இது.

பொருளாதாரத்தின் ஒவ்வொரு துறையும் பட்ஜெட்டில் உள்ளடக்கப்பட்டு உள்ளது. இதில் அடங்கியுள்ள புதிய வரி சீர்திருத்தம் புரட்சிகரமானது. ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளுக்கான வரி பயன்பாடுகள் உள்பட அன்னிய முதலீட்டை ஈர்ப்பதற்கு பல்வேறு வரிச்சலுகைகள் அளிக்கப்பட்டு உள்ளன.

இளைஞர் திறன் மேம்பாடு, ஏற்றுமதி மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில் துறையிலும் கவனம் செலுத்தப்பட்டு உள்ளது. இது வேலைவாய்ப்புகளுக்கு வழி வகுக்கும். மேலும் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள பல்வேறு அறிவிப்புகள் ஏற்றுமதியையும் அதிகரிக்கும்.

மேலும் ஒவ்வொரு மாவட்டத்தையும் ஏற்றுமதி மையங்களாக மாற்றுவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு உள்ளது என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.


Next Story