கொரோனாவுக்கு எதிரான ஒட்டு மொத்த நாடும் மேற்கொள்ளும் போர் 21 நாட்கள் நீடிக்கும் பிரதமர் மோடி


கொரோனாவுக்கு எதிரான ஒட்டு மொத்த நாடும் மேற்கொள்ளும் போர் 21 நாட்கள் நீடிக்கும் பிரதமர் மோடி
x
தினத்தந்தி 25 March 2020 5:11 PM GMT (Updated: 25 March 2020 5:11 PM GMT)

கொரோனாவுக்கு எதிரான ஒட்டு மொத்த நாடும் மேற்கொள்ளும் போர் 21 நாட்கள் நீடிக்கும் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

புதுடெல்லி,

நாட்டில் கொரோனா வைரஸ் பற்றிய முதல் பாதிப்பு கடந்த ஜனவரி 30ந்தேதி வெளியே தெரிய தொடங்கியது.  கடந்த 10ந்தேதி 50வது நபர் பாதிக்கப்பட்டது பற்றிய தகவல் வெளியானது.  ஆனால் கடந்த 15 நாட்களில் இந்த எண்ணிக்கை 11 மடங்காக உயர்ந்து 562 ஆக (அதிகாரப்பூர்வ தகவல்) உள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் பாதிப்பு ஏற்படுத்தி வரும் கொரோனா வைரசை எதிர்கொள்வது பற்றி பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் நேற்று உரையாற்றினார். 

கொரோனா வைரசை தடுத்து நிறுத்தவும் மற்றும் நாம் பாதுகாப்புடன் இருப்பதற்கும், சமூகத்தில் ஒவ்வொருவரும் தனித்திருக்க வேண்டும் என்பதே ஒரே வழியாகும்.  ஒவ்வொருவரும் மற்றவரிடம் இருந்து தொலைவில் இருங்கள்.  உங்களது வீடுகளில் இருங்கள்.

இந்தியா இன்று நள்ளிரவு 12 மணிமுதல் 21 நாட்கள் வரை 3 வாரங்கள் தொடர்ந்து முடக்கப்படுகிறது என கூறினார்.

அதன்பின் முதன்முறையாக அவர் தனது சொந்த தொகுதி மக்களிடம் இன்று பேசினார்.  அவர் பேசும்பொழுது, இந்த நெருக்கடியான நேரத்தில் நமக்காக பணியாற்றும் மருத்துவர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு ஆதரவு வழங்காமல் அல்லது ஒத்துழைக்காமல் இருப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும்படி உள்துறை அமைச்சகம் மற்றும் டி.ஜி.பி.க்களுக்கு உத்தரவிட்டு உள்ளேன்.

மகாபாரத போர் 18 நாட்கள் நடந்தது.  கொரோனா வைரசுக்கு எதிராக ஒட்டு மொத்த நாடும் மேற்கொள்ளும் போரானது 21 நாட்கள் நீடிக்கும்.

நாட்டு மக்கள் நிலைமையை புரிந்து கொள்ள வேண்டும்.  தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம்.  கொரோனாவுக்கு ஏழை, பணக்காரன் என தெரியாது.  தினமும் யோகா மற்றும் உடற்பயிற்சி செய்பவர்கள் என்பதற்காக அவர்களை அது விட்டு வைக்காது.

வாரணாசியின் எம்.பி.யாக இந்நேரத்தில் நான் உங்களுடன் இருக்க வேண்டும்.  ஆனால், டெல்லியில் என்ன நடக்கிறது என்பது உங்களுக்கு தெரியும்.  எனது சகாக்களிடம் இருந்து வாரணாசி பற்றிய தகவல்களை அவ்வப்பொழுது தெரிந்து கொள்கிறேன் என கூறியுள்ளார்.

Next Story