“ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து வெளியேறவேண்டும்” - பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டிப்பு


“ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து வெளியேறவேண்டும்” - பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டிப்பு
x
தினத்தந்தி 4 May 2020 11:00 PM GMT (Updated: 4 May 2020 10:24 PM GMT)

ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து பாகிஸ்தான் வெளியேறவேண்டும் என்று இந்தியா கண்டிப்புடன் கூறி உள்ளது.

புதுடெல்லி, 

காஷ்மீர் மாநிலத்தின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்து உள்ளது. அது ஆக்கிரமிப்பு காஷ்மீர் என அழைக்கப்படுகிறது. காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை சமீபத்தில் ரத்து செய்த மத்திய அரசு அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.

ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து அடிக்கடி பயங்கரவாதிகள் காஷ்மீருக்கு ஊடுருவுகிறார்கள். இதற்கு பாகிஸ்தான் ராணுவம் உடந்தையாக இருக்கிறது.

இந்த நிலையில், ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள கில்ஜித்-பல்டிஸ்தான் பிராந்தியத்தில் பொதுத்தேர்தல் நடத்தும் வகையில், அந்த பிராந்தியம் தொடர்பாக கடந்த 2018-ம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் திருத்தம் செய்ய பாகிஸ்தான் அரசுக்கு அனுமதி வழங்கி அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கில்ஜித்-பல்டிஸ்தான் உள்ளிட்ட ஜம்மு-காஷ்மீர், லடாக் ஆகிய ஒட்டுமொத்த பிராந்தியமும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி ஆகும். இந்தியாவுக்கு உள்ள சட்ட ரீதியான உரிமையை ரத்து செய்ய முடியாது. சட்ட விரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியின் மீது பாகிஸ்தான் அரசாங்கமோ அல்லது அந்த நாட்டின் அரசாங்கமோ உரிமை கொண்டாட முடியாது. மேலும் அங்கு எந்த மாற்றமும் செய்ய முடியாது.

பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு தொடர்பாக அந்த நாட்டு தூதரக மூத்த அதிகாரியிடம் இந்தியாவின் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 70 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் மனித உரிமைகள் மீறப்படுவதோடு, சுதந்திரமும் மறுக்கப்பட்டு வருகிறது. இந்த விஷயத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் கடந்த 1994-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் மாற்றத்தை ஏற்படுத்த பாகிஸ்தான் தொடர்ந்து மேற்கொள்ளும் முயற்சிகளை இந்தியா முற்றிலுமாக நிராகரிக்கிறது. எனவே சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் பகுதியில் இருந்து பாகிஸ்தான் உடனடியாக வெளியேற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story