இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 6,767 பேருக்கு தொற்று உறுதி; கொரோனா பாதிப்பு 1,31,868 ஆக உயர்வு
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 6,767 பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,31,868 ஆக உயர்ந்துள்ளது.
புதுடெல்லி,
உலக நாடுகள் அனைத்தும் கொரோனா பிடியில் இருந்து எப்படி தப்பிப்பது என்று எண்ணிக் கொண்டிருக்கும் அதே வேளையில், கொரோனா ஒரே நாளில் அதிகபட்சமாக எத்தனை பேரை பாதிப்புக்கு உள்ளாக்கலாம் என எண்ணி களத்தில் இறங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வைரசை அழிக்க இதுவரை தடுப்பு மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வராததால், கொரோனா தனது கோர தாண்டவத்தை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
இந்தியாவில் மெல்ல காலூன்றி பரவ தொடங்கிய கொரோனா, தற்போது தொடர்ந்து 3-வது நாளாக 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை தனது வலையில் சிக்க வைத்துள்ளது. இந்தியா-சீனா எல்லையில் அமைந்திருந்தாலும் சிக்கிம் மாநிலம் நேற்று முன்தினம் வரை இந்த வைரஸ் பிடியில் சிக்காமல் இருந்து வந்தது. ஆனால் நேற்று அங்கேயும் ஒருவரை கொரோனா பாதிப்புக்கு உள்ளாக்கிவிட்டது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளிவிவர பட்டியலில், ஒரே நாளில் 6,767 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவே இந்தியாவில் இதுவரை இல்லாத ஒரு நாளில் ஏற்பட்ட அதிகபட்ச பாதிப்பு ஆகும்.
இதனால் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,25,101-ல் இருந்து 1,31,868 ஆக உயர்ந்துள்ளது. மேலும் புதிதாக கொரோனா 147 பேரின் உயிரையும் காவு வாங்கி இருக்கிறது. இதில் அதிகபட்சமாக மராட்டிய மாநிலத்தில் மட்டும் 60 பேர் பலியாகி உள்ளனர். குஜராத்தில் 27 பேரும், டெல்லியில் 23 பேரும், மத்தியபிரதேசத்தில் 9 பேரும், ராஜஸ்தானில் 7 பேரும், தமிழகத்தில் 5 பேரும், மேற்கு வங்காளம் மற்றும் தெலுங்கானாவில் தலா 4 பேரும், உத்தரபிரதேசத்தில் 3 பேரும், ஆந்திரா, ஜம்மு-காஷ்மீர், கர்நாடகா, உத்தரகாண்ட் மற்றும் ஜார்கண்டில் தலா ஒருவரையும் கொரோனா 24 மணி நேரத்துக்கு உயிரிழக்கச் செய்துள்ளது.
கொரோனா வைரசின் கழுகு பார்வையில் சிக்கிய மராட்டிய மாநிலத்தில் புதிதாக 2,608 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் அங்கு வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47 ஆயிரத்தை தாண்டிவிட்டது. தமிழகத்தில் 16,277 பேரும், குஜராத்தில் 13,664 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தேசிய தலைநகர் டெல்லியில் இந்த எண்ணிக்கை 13 ஆயிரத்தை நெருங்கிவிட்டது.
ராஜஸ்தானில் 6,742 பேரையும், மத்தியபிரதேசத்தில் 6,371 பேரையும், உத்தரபிரதேசத்தில் 6,017 பேரையும், மேற்குவங்காளத்தில் 3,459 பேரையும், ஆந்திராவில் 2,757 பேரையும், பீகாரில் 2,380 பேரையும், பஞ்சாபில் 2,045 பேரையும், கர்நாடகாவில் 1,959 பேரையும், தெலுங்கானாவில் 1,813 பேரையும், ஜம்மு-காஷ்மீரில் 1,569 பேரையும், ஒடிசாவில் 1,269 பேரையும் அரியானாவில் 1,132 பேரையும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது.
கேரளாவில் தினந்தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அங்கு ஒரே நாளில் 63 பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் கேரளாவில் வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 795 ஆக உயர்ந்துள்ளது. ஜார்கண்டில் 350 பேரும், அசாமில் 329 பேரும், உத்தரகாண்டில் 244 பேரும், சண்டிகரில் 225 பேரும், சத்தீஸ்காரில் 214 பேரும், திரிபுராவில் 189 பேரும், இமாசலபிரதேசத்தில் 185 பேரும், கோவாவில் 55 பேரும், லடாக்கில் 49 பேரும், அந்தமான் நிகோபர் தீவில் 33 பேரும், மணிப்பூரில் 29 பேரும், புதுச்சேரியில் 26 பேரும், மேகாலயாவில் 14 பேரும், தாதர்-நகர் ஹவேலி, மிசோரம், அருணாசலபிரதேசம் மற்றும் சிக்கிமில் தலா ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ள 1,31,868 பேரில், 54,441 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிவிட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story