2 மகள்களை கொண்டு ஏர் உழுது வேர்க்கடலை விதைத்த விவசாயி: திரைப்பட நடிகர் சோனுசூட் இலவசமாக டிராக்டர் வழங்கினார்


2 மகள்களை கொண்டு ஏர் உழுது வேர்க்கடலை விதைத்த விவசாயி: திரைப்பட நடிகர் சோனுசூட் இலவசமாக டிராக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 26 July 2020 10:08 PM GMT (Updated: 26 July 2020 10:08 PM GMT)

மாடுகளுக்கு பதிலாக 2 மகள்களை கொண்டு ஏர் உழுது வேர்க்கடலை விதைத்த விவசாயியின் நிலையை கருதி, திரைப்பட நடிகர் சோனுசூட் ஒரு டிராக்டரை அவர்களுக்கு இலவசமாக வழங்கினார்.

திருப்பதி, 

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியைச் சேர்ந்தவர் நாகேஸ்வரராவ். விவசாயியான அவர் மதனப்பள்ளியில் டீக்கடை நடத்தி வருகிறார். அவர், தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். அவர்களின் 2 மகள்கள் கல்லூரியில் படித்து வருகின்றனர். மனைவி குடும்ப தலைவியாக உள்ளார்.

தற்போது கொரோனா ஊரடங்கால் டீக்கடை மூடப்பட்டுள்ளது. அவர், ஏற்கனவே கொரோனா ஊரடங்கு காலத்தில் தனது நிலத்தில் விளைந்த தக்காளியை விற்பனை செய்ய முடியாமல் நஷ்டத்தைச் சந்தித்தார். எனினும் அவர், மதனப்பள்ளி அருகே தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்ய முடிவு செய்தார்.

நிலத்தை டிராக்டரால் உழுது விவசாய பணிகளை மேற்கொள்ள அவரிடம் போதிய பணம் இல்லை எனக்கூறப்படுகிறது. நிலத்தை உழ அவரிடம் மாடுகள் இல்லாததால், அதற்கு பதிலாகத் தன்னுடைய இரு மகள்களை மாடுகள் போல் பயன்படுத்தி ஏர் உழுது நிலத்தைப் பண்படுத்தி வேர்க்கடலை விதையை விதைத்தார்.

சொந்த நிலத்தில் அவரும், மனைவி மற்றும் 2 மகள்களை கொண்டு 4 பேராகச் சேர்ந்து வேர்க்கடலை விதை விதைத்தனர். அவர்களை பார்த்த கிராம மக்கள் அச்சரியம் அடைந்தனர். கல்லூரியில் படிக்கும் மகள்களை ஏரை இழுக்க செய்யலாமா? என அவரை கிராம மக்கள் கண்டித்தனர். ஆனால் அவர், தாய்க்கு சமமான நிலத்தை இதுபோல் உழுவது தவறு இல்லை, என அவர்களிடம் கூறி விட்டார்.

விவசாயி நாகேஸ்வரராவின் நிலையை உணர்ந்த திரைப்பட நடிகர் சோனுசூட் ஒரு டிராக்டரை அவர்களுக்கு இலவசமாக வழங்கினார். இதனால் விவசாயியும், அவரது குடும்பத்தினரும் மகிழ்ச்சியடைந்தனர்.


Next Story