விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வருமா? - நாளை மீண்டும் பேச்சுவார்த்தை


விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வருமா? - நாளை மீண்டும் பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 21 Jan 2021 12:15 AM GMT (Updated: 20 Jan 2021 9:07 PM GMT)

3 வேளாண் சட்டங்களையும் நிறுத்தி வைக்க மத்திய அரசு முன் வந்துள்ளது. இதனால் விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

புதுடெல்லி, 

3 வேளாண் சட்டங்களையும் நிறுத்தி வைக்க மத்திய அரசு முன் வந்துள்ளது. இது தொடர்பான அடுத்த சுற்று பேச்சுவார்த்தை நாளை நடக்கிறது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, டெல்லியில் வாட்டும் குளிருக்கு மத்தியிலும் விவசாயிகள் நடத்தும் போராட்டம் நேற்று 56-வது நாளை எட்டியது. வருகிற 26-ந்தேதி நாட்டின் குடியரசு தினவிழா, தலைநகரில் நடைபெற இருப்பதால் அதற்குள் விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து விட வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது.

ஆனால், குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்துவதாக விவசாய அமைப்புகள் அறிவித்து, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

போராடும் விவசாய அமைப்புகளுடன் மத்திய அரசு 9 சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தி விட்டது. ஆனாலும் அவற்றில் ஆக்கப்பூர்வமான முடிவு எட்டப்படவில்லை.

3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெற்றே ஆக வேண்டும் என்பதில் விவசாய அமைப்புகள் பிடிவாதம் காட்டுகின்றன. அதே போன்று, அவற்றை திரும்பப்பெற முடியாது என மத்திய அரசும் உறுதியாக உள்ளது. எனவே விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முடியாமல் முட்டுக்கட்டை நீடிக்கிறது.

இந்த நிலையில், 10-வது சுற்று பேச்சுவார்த்தை டெல்லி விஞ்ஞான பவனில் நேற்று மதியம் 2.45 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.

மத்திய அரசின் சார்பில், விவசாய மந்திரி நரேந்திரசிங் தோமர், உணவு மந்திரி பியூஷ் கோயல், வர்த்தக ராஜாங்க மந்திரி சோம் பர்காஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். விவசாயிகள் தரப்பில் 40 அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

முதல் 2 அமர்வுகளில் எந்த திருப்புமுனையும் ஏற்படவில்லை. மத்திய அரசும் சரி, விவசாயிகள் அமைப்பினரும் சரி தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தனர். வேண்டுமானால் வேளாண் சட்டங்களில் தேவையான திருத்தங்களை செய்ய அரசு தயாராக இருக்கிறது என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் விவசாய அமைப்புகள் தரப்பில் இதை ஏற்கவில்லை. வேளாண் சட்டங்களை திரும்பப்பெற்றே ஆக வேண்டும் என்று வலியுறுத்தினர்.

தொடர்ந்து பேச்சு வார்த்தை நீடித்தபோது, வேளாண் சட்டங்களை ஒன்றரை ஆண்டு காலத்துக்கு நிறுத்தி வைக்கலாம், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் மத்திய அரசின் பிரதிநிதிகளைக்கொண்ட ஒரு கூட்டுக்குழுவை அமைத்து பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என மத்திய மந்திரிகள் யோசனை தெரிவித்தனர்.

மேலும், குழு அறிக்கை அளிக்கிற வரையில் வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்கலாம், அதே போன்று விவசாய அமைப்புகள் தங்கள் போராட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் மத்திய மந்திரிகள் கூறினர்.

இது தொடர்பாக தங்களுக்குள் ஆலோசிக்க வேண்டியது இருக்கிறது என்று விவசாய அமைப்புகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு வசதியாக 22-ந் தேதி (நாளை) அடுத்த சுற்று பேச்சுவார்த்தை நடத்த இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.

இதுபற்றி மத்திய விவசாய மந்திரி நரேந்திரசிங் தோமர் கூறியதாவது:-

இன்றைய பேச்சுவார்த்தையின்போது, ஒரு இறுதி முடிவை எட்டிவிடுவதில் அரசு ஆர்வமாக இருந்தது. பேச்சு வார்த்தை, சில காரசாரமான தருணங்களுக்கு மத்தியிலும் இணக்கமான சூழலில் நடைபெற்றது. விவசாயிகள் போராட்டம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டுவிடலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. போராட்டம் முடிவுக்கு வர வேண்டும் என்பதுதான் அரசின் விருப்பம். விவசாய அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை தொடரும்.

வேளாண் சட்டங்களை ஒன்றல்லது ஒன்றரை ஆண்டு காலம் நிறுத்தி வைக்க அரசு தயாராக இருக்கிறது. அந்த காலத்தில் பரஸ்பர பேச்சுவார்த்தையின்மூலம் தீர்வு காண முடியும்.

22-ந் தேதி (நாளை) நடக்கிற அடுத்த சுற்று பேச்சுவார்த்தையின்போது விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் தீர்வு எட்டப்படும் என்று நம்புகிறேன் என்று அவர் கூறினார்.

இதனால் விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


Next Story