சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு; விசாரணையை கேரள மாநிலத்துக்கு மாற்றக்கோரிய வழக்கில் சி.பி.ஐ.க்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்


சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு; விசாரணையை கேரள மாநிலத்துக்கு மாற்றக்கோரிய வழக்கில் சி.பி.ஐ.க்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
x
தினத்தந்தி 25 Feb 2021 6:23 AM GMT (Updated: 25 Feb 2021 6:23 AM GMT)

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணையை கேரள மாநிலத்துக்கு மாற்றக்கோரிய வழக்கில் பதில் அளிக்க சி.பி.ஐ.க்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தந்தை, மகன் கொலை
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும் சாத்தான்குளம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு தாக்கப்பட்டனர். பின்னர் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் 2 பேரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இதுகுறித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில், விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி. போலீசார், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 10 போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்தனர். தற்போது இந்த வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் கைதான போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பால்துரை கொரோனாவால் இறந்ததால், மற்ற 9 பேர் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.

சுப்ரீம் கோர்ட்டில் மனு
தந்தை-மகன் கொலை வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் அவ்வப்போது சாத்தான்குளத்துக்கும், கோவில்பட்டிக்கும் சென்று விசாரணை நடத்தி சென்றனர். தற்போது இறுதிக்கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது.இதற்கிடையில், இந்த வழக்கில் சி.பி.ஐ. கடந்த ஆண்டு செப்டம்பரில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. 2 வழக்குகளில், அதிகாரிகள் உள்பட 9 போலீஸ் அதிகாரிகள் சம்மந்தப்பட்டிருப்பதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு விசாரணையை கேரள மாநிலத்துக்கு மாற்றக்கோரி, வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

4 வாரங்களுக்குள் பதில்
அதில், சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் 9 போலீஸ்காரர்கள் குற்றம்சாட்டப்பட்டுள்ளதால், அதிக அளவில் கவனம் பெற்றுள்ளது. இதுவே, பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை கண்காணித்து வருகிறது. குற்றச்சாட்டுகள் பதிவு நிலையில் இருந்து வருகிறது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள போலீசார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது தாக்கப்பட்டனர். எனவே, தமிழகத்தில் இந்த வழக்கு விசாரணை நேர்மையாக நடைபெறாது என்ற கவலை உள்ளதால், வழக்கு விசாரணையை கேரளா தலைநகர் திருவனந்தபுரத்துக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இது தொடர்பான மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ரிஷிகேஷி ராய், சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு விசாரணையை கேரளத்துக்கு மாற்றக்கோரிய வழக்கில் சி.பி.ஐ. மற்றும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஏனைய 8 பேரும் 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டார்.

Next Story