அம்பானி வீட்டு அருகே வெடிப்பொருள் விவகாரம்: கைதான போலீஸ் அதிகாரி அலுவலகத்தில் என்.ஐ.ஏ. விடிய, விடிய சோதனை


போலீஸ் அதிகாரி சச்சின் வாசே
x
போலீஸ் அதிகாரி சச்சின் வாசே
தினத்தந்தி 16 March 2021 10:15 PM GMT (Updated: 16 March 2021 10:15 PM GMT)

அம்பானி வீட்டு அருகே வெடிப்பொருள் சிக்கிய விவகாரத்தில் கைதான போலீஸ் அதிகாரி சச்சின் வாசேவின் அலுவலகத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விடிய, விடிய சோதனை நடத்தினர்.

மற்றொரு போலீஸ் அதிகாரியிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

வெடிப்பொருடன் கார்

பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் அன்டிலா வீடு தென்மும்பை பகுதியில் அமைந்து உள்ளது. இந்த வீட்டின் அருகே கடந்த மாதம் 25-ந் தேதி வெடிப்பொருட்களுடன் கார் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. இந்த வழக்கை விசாரித்து வரும் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) போலீஸ் உதவி இன்ஸ்பெக்டர் சச்சின் வாசேவை கைது செய்து உள்ளது.

இந்த சம்பவம் மாநில அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மேலும் போலீசார் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சச்சின் வாசே கைது செய்யப்பட்ட நிலையில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் சந்தித்து பேசியருந்தார்.

அலுவலகத்தில் சோதனை

இந்தநிலையில் கைது செய்யப்பட்ட சச்சின் வாசேவிடம் என்.ஐ.ஏ. தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இதில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தென்மும்பை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சச்சின் வாசேவின் குற்றப்புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் சோதனையை தொடங்கினர். இந்த சோதனை நேற்று அதிகாலை 4 மணிக்கு தான் முடிந்ததாக கூறப்படுகிறது.

சோதனையின் போது வழக்கு தொடர்பான ஆவணங்கள், மடிக்கணினி, ஐ-பாட், செல்போன்கள் உள்ளிட்ட மின்னணு சாதனைங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக என்.ஐ.ஏ. அதிகாரி ஒருவர் கூறினார்.

கார்கள் பறிமுதல்

இதேபோல வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ. ஏற்கனவே இனோவா கார் ஒன்றை பறிமுதல் செய்து இருந்தனர். இந்தநிலையில் அதிகாரிகள் மெர்சிடஸ் பென்ஸ் கார் ஒன்றையும் பறிமுதல் செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது, வெடிப்பொருட்களுடன் நிறுத்தப்பட்ட ஸ்கார்பியோ காரை பின்தொடா்ந்து வந்து, பின்னர் அதில் இருந்த டிரைவரை ஏற்றி சென்ற கார் என கூறப்படுகிறது.

இதேபோல வெடிப்பொருட்களுடன் கண்டெடுக்கப்பட்ட கார், சச்சின் வாசேவிடம் இருந்ததாக ஹிரேன் மன்சுக்கின் மனைவி குற்றம்சாட்டி இருந்தார்.

மற்றொரு அதிகாரி

இதேபோல என்.ஐ.ஏ. வழக்கு தொடர்பாக ஏற்கனவே உதவி கமிஷனர் உள்பட போலீசாரின் வாக்குமூலங்களை பெற்று இருந்தனர். அதே நேரத்தில் குற்றப்புலனாய்வு பிரிவு உதவி இன்ஸ்பெக்டர் ரியாசுதீன் காசியிடம் என்.ஐ.ஏ. தொடர்ந்து 3-வது நாளாக விசாரணை நடத்தியது.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், "வெடிப்பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட 2 நாளுக்கு பிறகு ரியாசுதீன் காசி, சச்சின் வாசே வசித்து வரும் தானே சாகித் பகுதியில் உள்ள கட்டிடத்தின் கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை வாங்கி உள்ளார். ஆனால் வழக்கு தொடர்பாக சேகரிக்கப்பட்ட சாட்சியங்கள் பட்டியலில் அது சேர்க்கப்படவில்லை. எனவே ஆதாரங்களை அழிப்பதற்காக அவர்கள் முயற்சி செய்து இருக்கலாம் என நினைக்கிறோம். இதேபோல ஸ்கார்பியோ காரில் இருந்த போலி நம்பர் பிளேட்களையும் ரியாசுதீன் காசி வாங்கியதாக கூறப்படுகிறது. பல இடங்களில் அவருக்கு இருந்த தொடர்பை அடுத்து என்.ஐ.ஏ.வின் விசாரணை வளையத்திற்குள் வந்து உள்ளார். இதேபோல 25-ந் தேதி கார்மிக்கெல் சாலை கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளில் காணப்படும் ஒருவரும், போலீஸ்காரர் என கூறப்படுகிறது. தடவியல் ஆய்வுக்கு பிறகு தான் அது உறுதி செய்யப்படும் " என்றார்.

அழிக்க முயற்சி

முகேஷ் அம்பானியின் வீட்டின் அருகில் வெடிப்பொருட்களுடன் நின்ற கார் 25-ந் தேதிக்கு முன் சச்சின் வாசேவின் கட்டிடத்தில் தான் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. எனவே தான் அதன் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ரியாசுதீன் காசி கைப்பற்றி அழிக்க முயற்சி செய்து இருக்கலாம் என தெரிகிறது.

முகேஷ் அம்பானியின் வீடு அருகே வெடிப்பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில் போலீஸ் அதிகாரிக்கு எதிராக என்.ஐ.ஏ. சாட்சியங்களை திரட்டி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் வழக்கில் போலீசார் யாரும் சிக்குவார்களா என்ற கேள்வி எழுந்து உள்ளது.


Next Story