யாருக்கெல்லாம் கொரோனா பரிசோதனை நடத்தலாம்; புதிய விதிமுறைகள் வெளியீடு


யாருக்கெல்லாம் கொரோனா பரிசோதனை நடத்தலாம்; புதிய விதிமுறைகள் வெளியீடு
x
தினத்தந்தி 6 May 2021 5:35 AM IST (Updated: 6 May 2021 5:35 AM IST)
t-max-icont-min-icon

யாருக்கெல்லாம் கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும் என்று புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்டது.

புதிய விதிமுறைகள்

இந்தியாவில் உள்ள கொரோனை வைரஸ் பரிசோதனை கூடங்களின் வேலைப்பளுவை குறைக்க வேண்டும் என்பதற்காக புதிய விதிமுறைகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) வெளியிட்டுள்ளது. அதில் ஆராய்ச்சி கவுன்சில் மேலும் கூறியிருப்பதாவது:-

தனிநபர் ஒருவருக்கு காய்ச்சல், தலைவலி, தொண்டை வலி, மூச்சுவிடுவதில் சிரமம், உடல்வலி, சுவை உணர்வு, வாசனை உணர்வு இழத்தல், வயிற்றுப்போக்கு, வாந்தி, குமட்டல் போன்ற அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமே ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனை செய்யலாம். ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனையிலோ அல்லது ரேபிட் ஆன்ட்டி ஜென்பரிசோதனையில் ஒருவருக்கு பாசிட்டிவ் வந்துவிட்டால், அவருக்கு மீண்டும் ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனை தேவையில்லை.

மாநிலத்துக்குள் பயணம்

தனிநபர் ஏற்கனவே ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட பின் மீண்டும் அவருக்கு பரிசோதனை தேவையி்ல்லை. ஒருவர் 10 நாட்கள் வீட்டில் தனிமையில் இருந்த நிலையில் கடைசி 3 நாட்கள் காய்ச்சல் இல்லாமல் இருந்தாலும் அவருக்கும் ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனை தேவையில்லை.

மருத்துவமனையில் இருந்து கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுபவர்களுக்கும் மீண்டும் ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனை நடத்த தேவையில்லை. மாநிலத்துக்குள் பயணிக்கும்போது, ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனை செய்ய வேண்டும் என மாநில அரசுகள் கூறியிருந்தால், அந்த விதிமுறையும் நீக்கப்படுகிறது. ஆரோக்கியமான ஒரு தனிநபருக்கு ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனை தேவையில்லை.

அத்தியாவசியமற்ற பயணம்

அதேசமயம், அத்தியாவசியமற்ற பயணங்கள், மாநிலத்துக்குள் பயணம் செய்யும் தனிநபர்களுக்கு அறிகுறி ஏதும் இருந்தால், அவர் பயணத்தை தவிர்க்க வேண்டும். அறிகுறிகள் இல்லாத நபர்கள் பயணம் செய்யும்போது, கண்டிப்பாக கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் ரேபிட் ஆன்ட்டிஜென் பரிசோதனையை மீண்டும் கொண்டு வரலாம். பெருநகரங்கள், சிறுநகரங்கள், கிராமங்கள், அலுவலகங்கள், கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள், சமூதாய கூடங்கள் உள்ளிட்டவற்றிலும் மக்களுக்கு ரேபிட் ஆன்ட்டி டெஸ்ட் நடத்தலாம். இதற்கான வசதி வாய்ப்புகளை உருவாக்கலாம். தனிநபர் ஒருவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்து, அவருக்கு ரேபிட் ஆன்ட்டி பரிசோதனையில் நெகட்டிவ் வந்தால் அவர் ஆர்.சி.-பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தலாம்.

தடுப்பூசி விவரம்

தனிநபர் ஒருவர் ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனை அல்லது ரேபிட் பரிசோதனைக்கு வரும்போது, அவர் தடுப்பூசி செலுத்திக்கொண்டாரா, எத்தனை தடுப்பூசி செலுத்திக்கொண்டார் என்பதை ஒரு விண்ணப்பத்தில் பதிவு செய்ய வேண்டும். இந்த தகவல் மூலம் எத்தனை பேர், தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை அறிய முடியும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story