அசாமில் கடும் மழை; பிரம்மபுத்திரா நதியில் வெள்ளப்பெருக்கு


அசாமில் கடும் மழை; பிரம்மபுத்திரா நதியில் வெள்ளப்பெருக்கு
x
தினத்தந்தி 1 Sep 2021 8:18 PM GMT (Updated: 1 Sep 2021 8:18 PM GMT)

அசாம் மாநிலத்தில் கடும் மழையால் பிரம்மபுத்திரா உள்ளிட்ட நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கவுகாத்தி,

அசாமில் தொடர்ந்து கடும் மழை பெய்து வருகிறது. இதனால், அம்மாநிலம் வழியே பாயும் பெரும் நதியான பிரம்மபுத்திராவிலும், அதன் துணைநதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் நல்பாரி மாவட்டம் மிக மோசமாகவும், அதையடுத்து தாராங், லக்கிம்பூர் மாவட்டங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

18 மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்து 278 கிராமங்கள் வெள்ளநீரால் சூழப்பட்டுள்ளன. மொத்தத்தில் 5.74 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. மோரிகான் மாவட்டத்தில் ஒரு குழந்தை நீரில் மூழ்கி இறந்தது. இதனால் மாநிலத்தில் மழை வெள்ளத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.

39 ஆயிரத்து 831 எக்டேர் விவசாய நிலம் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளது. விளைந்த கதிர்கள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளன. புகழ்பெற்ற காசிரங்கா தேசிய வனவிலங்கு பூங்காவின் 70 சதவீத பகுதியும் வெள்ளத்தில் மூழ்கியிருக்கிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக 14 மாவட்டங்களில் 105 நிவாரண முகாம்களை மாநில அரசு அமைத்திருக்கிறது.

இந்நிலையில் அசாம் முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு வெள்ள சூழ்நிலை குறித்து கேட்டறிந்த பிரதமர் மோடி, தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என உறுதி அளித்தார்.

Next Story