காஷ்மீரில் அமைதி நிலவுகிறது; சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது - அமித் ஷா உரை!
காஷ்மீரில் அமைதி நிலவி வருகிறது, தொழில் முதலீடுகள் அதிகரித்துள்ளன, சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது என அமித் ஷா உரையாற்றி உள்ளார்.
புதுடெல்லி,
புதுடெல்லியில் நடைபெற்ற இந்துஸ்தான் டைம்ஸ் தலைமைத்துவ உச்சி மாநாட்டில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று கலந்துகொண்டு உரையாற்றினார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
‘2019ம் ஆண்டு 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பின் காஷ்மீரில் அமைதி நிலவி வருகிறது, தொழில் முதலீடுகள் அதிகரித்துள்ளன, சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. அரசியல் சாசன சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ ஆகியவற்றை 2019ம் ஆண்டு ரத்து செய்ததன் மூலம், யாராலும் நம்பமுடியாத விஷயத்தை பிரதமர் மோடி செய்துள்ளார்.
கொரோனா இரண்டாவது அலையின் போது, பிரதமர் மோடி சரியான முறையில் வளங்களை பயன்படுத்தி ஆக்சிஜன் பற்றாக்குறை பிரச்சினையை வெற்றிகரமாக எதிர்கொண்டார்.
பாகிஸ்தானால் வரும் எல்லை தாண்டிய தீவிரவாத தாக்குதல்களுக்கு இந்தியா சர்ஜிக்கல் ஸ்டிரைக் போன்ற அணுகுமுறை மூலம் சரியான பதிலடி கொடுத்தது.அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் மட்டுமே இதுவரை சர்ஜிக்கல் ஸ்டிரைக் போன்ற தாக்குதல்களை செய்துள்ளன. தற்போது இந்தியாவும் அதை செய்துகாட்டி உள்ளது.
இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது.
நாட்டில் நீண்ட காலமாக கூட்டணி அரசாங்கங்களின் சகாப்தம் இருந்து வந்தது. 2014ம் ஆண்டுக்கு பின் தான் அரசியல் நிலைத்தன்மை கிடைத்தது. அதனால், பிரதமர் அலுவலகம் எந்த கொள்கையிலும் சமரசம் செய்து கொள்ளாமல் நடவடிக்கை எடுக்க முடிந்தது.’
இவ்வாறு அவர் உரையாற்றினார்.
Related Tags :
Next Story