உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி - சரத்பவார்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 11 Jan 2022 10:54 PM GMT (Updated: 11 Jan 2022 10:54 PM GMT)

உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி வைத்து போட்டியிட உள்ளதாக சரத்பவார் தெரிவித்துள்ளார்.

மும்பை, 

உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களுக்கு அடுத்த மாதம் 10-ந்தேதி தொடங்கி மார்ச் 7-ந்தேதி வரை தேர்தல் நடைபெறுகிறது.

இந்தநிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நேற்று மும்பையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கோவாவில் பா.ஜனதாவை ஆட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும். அந்த கட்சி தோற்கடிக்கப்பட வேண்டும் என்பது தான் பொதுவான கருத்தாக உள்ளது. எனவே ஒருமித்த கருத்துகள் கொண்ட கட்சிகள் பேசி வருகின்றன. குறிப்பாக உள்ளூர் காங்கிரஸ் தலைவர்களுடன் எனது கட்சியை சேர்ந்த பிரபுல் பட்டேல், சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

உத்தரபிரதேசம், மணிப்பூர், கோவாவில் எங்களது கட்சி போட்டியிடுவதை உறுதி செய்யும். மணிப்பூரில் காங்கிரசுடன் கூட்டணி வைத்து 5 தொகுதிகளில் தேசியவாத காங்கிரஸ் போட்டியிடும்.

உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியுடன் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி வைத்து போட்டியிடும். இந்த மாநிலத்தில் பா.ஜனதா மதவாத பாதையில் தேர்தலை சந்திக்கிறது. ஆனால் வாக்காளர்கள் இதை ஏற்க மாட்டார்கள் என நம்புகிறேன். உத்தரபிரதேசத்தில் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்” என்று அவர் கூறினார்.

Next Story