9 மணி நேர விசாரணை நிறைவு: சிபிஐ அலுவலகத்தில் இருந்து புறப்பட்டார் டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால்


9 மணி நேர விசாரணை நிறைவு: சிபிஐ அலுவலகத்தில் இருந்து புறப்பட்டார் டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால்
x

மதுபான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலிடம் சிபிஐ அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தினர்.

டெல்லி,

தலைநகர் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில அரசின் மதுபானக்கொள்கை ஊழல் குற்றச்சாட்டு பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. அங்கு மதுபான வியாபாரிகளுக்கு உரிமங்கள் வழங்குவது தொடர்பாக கடந்த 2021-22-ம் ஆண்டு மதுபானக்கொள்கையை கெஜ்ரிவால் அரசு வெளியிட்டது.

அந்த கொள்கையில், மதுபான வியாபாரிகளுக்கு சலுகைகள் வழங்குதல், குறிப்பாக உரிமக்கட்டணத்தைத் தள்ளுபடி செய்தல், குறைத்தல், அனுமதியின்றி 'எல்-1' உரிமத்தை நீட்டித்தல் உள்ளிட்டவற்றில் ஊழல் நடந்து, அதில் கெஜ்ரிவால் கட்சியின் மூத்த தலைவர்கள் பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

அப்போதைய டெல்லி துணை நிலை கவர்னர் சக்சேனா உத்தரவின்படி, இந்த ஊழல் விவகாரத்தை சி.பி.ஐ. கையில் எடுத்து விசாரித்து வருகிறது. இதில் நடந்ததாக கூறப்படுகிற சட்ட விரோத பணப்பரிமாற்றங்கள் தொடர்பாக மத்திய அமலாக்கத்துறை விசாரிக்கிறது.சி.பி.ஐ. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 17-ந் தேதி வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்த ஊழலில், மதுபானக்கொள்கையை உருவாக்கிய கலால் துறைக்கு பொறுப்பேற்றவர் என்ற வகையில், டெல்லி துணை முதல்-மந்திரியாக இருந்த மணிஷ் சிசோடியாவின் மீது சி.பி.ஐ.யின் சந்தேகப்பார்வை படிந்தது.

மணிஷ் சிசோடியாவுக்கு சொந்தமான இடங்கள், அவரது அலுவலகம் என பல இடங்களில் சி.பி.ஐ. அதிரடி சோதனைகளை நடத்தியது. மணிஷ் சிசோடியாவுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி கடந்த பிப்ரவரி மாதம் 26-ந் தேதி அவர் ஆஜரானபோது, பல மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி அதன் இறுதியில் கைது செய்தது.இது டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதே நேரத்தில் இது அரசியல்ரீதியில் பழிவாங்கும் நடவடிக்கை என்று அரவிந்த் கெஜ்ரிவாலும், ஆம் ஆத்மி கட்சியும் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.இந்த வழக்கில் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து மணிஷ் சிசோடியா தனது துணை முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

இப்போது இந்த மதுபானக்கொள்கை ஊழலின் உச்சக்கட்ட நடவடிக்கையாக டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் மீது சி.பி.ஐ.யின் பார்வை படிந்துள்ளது.

அந்த வகையில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சிபிஐ சம்மன் அனுப்பியது.

இதனையடுத்து, இன்று மதியம் 12 மணியளவில் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் மதுபான கொள்கை ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக சிபிஐ கெஜ்ரிவால் பல்வேறு கேள்விகள் எழுப்பினர். இதற்கு அவர் பதில் அளித்தார்.

இந்நிலையில், சிபிஐ விசாரணை 9 மணி நேரம் நீடித்த நிலையில் விசாரணை தற்போது நிறைவடைந்துள்ளது. மதியம் 12 மணிக்கு தொடங்கிய விசாரணை இரவு 9 மணி வரை நீடித்து தற்போது நிறைவடைந்ததையடுத்து சிபிஐ அலுவலகத்தில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் புறப்பட்டு சென்றார்.


Next Story