4 பெண்களை காதலித்து ஏமாற்றிய வாலிபர் கைது


4 பெண்களை காதலித்து ஏமாற்றிய வாலிபர் கைது
x

பெலகாவியில் சப்-இன்ஸ்பெக்டர் பெயரில் இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கியதுடன், 4 பெண்களை காதலித்து ஏமாற்றிய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். திருமண ஆசை காட்டி ரூ.4 லட்சம் பறித்ததும் அம்பலமகாகி உள்ளது.

பெங்களூரு:

பெலகாவியில் சப்-இன்ஸ்பெக்டர் பெயரில் இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கியதுடன், 4 பெண்களை காதலித்து ஏமாற்றிய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். திருமண ஆசை காட்டி ரூ.4 லட்சம் பறித்ததும் அம்பலமகாகி உள்ளது.

சப்-இன்ஸ்பெக்டர் மீது புகார்

பெலகாவி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சஞ்சீவ் எம்.பட்டீலை சந்தித்து ஒரு இளம்பெண் புகார் அளித்தார். அதில், பெலகாவி நிப்பானி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் அனில்குமார் இன்ஸ்டாகிராம் மூலம் தன்னுடன் பழகி, தன்னை காதலித்து, திருமணம் செய்வதாக கூறியதுடன், பணம் வாங்கியும் மோசடி செய்து விட்டார் என்று கூறி இருந்தார். அந்த புகாரை பெற்றுக் கொண்ட போலீஸ் சூப்பிரண்டு, இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டு இருந்தார்.

அத்துடன் நிப்பானி சப்-இன்ஸ்பெக்டர் அனில்குமாரை அழைத்து, போலீஸ் சூப்பிரண்டு சஞ்சீவ் எம்.பட்டீல் விசாரித்தார். அப்போது தனக்கும் அந்த பெண்ணுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், தனது பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி மோசடி செய்யப்பட்டு இருப்பதாகவும் அனில்குமார் தெரிவித்தார். இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தினார்கள்.

வாலிபர் கைது

இந்த நிலையில், இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றியதாக விஜய்குமார் (வயது 27) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில், விஜய்குமார் பெலகாவி மாவட்டம் அதானியை சேர்ந்தவர் என்று தெரிந்தது. இவர், முதலில் தட்சிண கன்னடா மாவட்டத்தில் கிராம பஞ்சாயத்து கணக்கு அதிகாரியாக பணியாற்றுள்ளார். அப்போது லஞ்சம் வாங்கியதால் போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அரசு பணியில் இருந்தும் அவர் நீக்கம் செய்யப்பட்டார்.

இதையடுத்து, கடந்த 2020-ம் ஆண்டில் நிப்பானி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அனில்குமார் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி உள்ளார். அனில்குமாரின் புகைப்படத்தையே இன்ஸ்டாகிராமில் வைத்துள்ளனர். இதையடுத்து, ஆயிரக்கணக்கானோர் அவரை பின்தொடர்ந்துள்ளனர். அவ்வாறு பின்தொடர்ந்த இளம்பெண்களுடன் தினமும் விஜய்குமார் குறுந்தகவலகள் அனுப்பி பேசி வந்துள்ளார்.

4 பெண்களை காதலித்து மோசடி

இவ்வாறு பேசிய 4 பெண்களை காதலிப்பதாக விஜய்குமார் கூறியுள்ளார். அந்த பெண்களும் அவரை சப்-இன்ஸ்பெக்டர் என நினைத்து காதலித்துள்ளனர். அந்த பெண்களை திருமணம் செய்வதாக கூறி, அவர்களிடம் இருந்து பணமும் பெற்றுள்ளார். ஒட்டு மொத்தமாக 4 பெண்களிடமும் இருந்து ரூ.4 லட்சத்தை வாங்கி மோசடி செய்ததும் தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட ஒருஇளம்பெண், விஜய்குமாரை நேரில் பார்க்க வேண்டும் என்று கூறியும் மறுத்துள்ளார்.

வீடியோ அழைப்பு மூலமாக பார்க்க விரும்பியதற்கும் விஜய்குமார் சம்மதிக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் விஜய்குமாரை பெலகாவி போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story