"ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்த பிறகு குஜராத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் அரசுப் பள்ளிகள் கட்டப்படும்" - கெஜ்ரிவால் வாக்குறுதி


ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்த பிறகு குஜராத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் அரசுப் பள்ளிகள் கட்டப்படும் - கெஜ்ரிவால் வாக்குறுதி
x

குழந்தைகளின் எதிர்காலத்திற்காக ஆம் ஆத்மிக்கு ஒரு வாய்ப்பு கொடுக்குமாறு குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் கெஜ்ரிவால் பேசினார்.

ஆமதாபாத்,

குஜராத்தில் நடப்பு ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 27 ஆண்டுகளாக பா.ஜ.க. ஆட்சியில் உள்ள நிலையில், இந்த முறை ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடிக்கும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

ஏற்கனவே பஞ்சாப்பில் தனது தேர்தல் அறிக்கை மற்றும் யுக்தியால் ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்து அதிகாரத்திற்கு வந்துள்ளது. இதேபோல குஜராத்திலும் ஆட்சியை பிடிக்க முனைப்பு காட்டி வருகிறது. இதன்படி, டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ச்சியாக குஜராத்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த பயணத்தில், குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் 300 யூனிட் இலவச மின்சாரம், வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படும் அல்லது மாதம் 3 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் போன்ற வாக்குறுதிகளை கெஜ்ரிவால் வெளியிட்டு உள்ளார்.

மேலும், 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பெண்களுக்கும் ஆயிரம் ரூபாய் மாத உதவித்தொகையாக வழங்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை வழங்கி கெஜ்ரிவால் மகளிர் வாக்குகளையும் கவர்ந்துள்ளார்.

இந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முடல்-மந்திரி பக்வந்த் மான் ஆகிய இருவரும் குஜராத்திற்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். அங்கு கட்ச் மாவட்டத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

இந்த கூட்டத்தில் கெஜ்ரிவால் பேசியதாவது;-

"டெல்லியில் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள், மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் சேர்க்கை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை கிடைத்தவுடன் தங்கள் குடும்பத்தை வறுமையிலிருந்து மீட்டெடுப்பார்கள். ஆனால் குஜராத்தில் ஆளும் பா.ஜ.க. கட்ச் பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளை மூடி வருவதாக அறிந்தேன்.

ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்த பிறகு குஜராத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் அரசுப் பள்ளிகள் கட்டப்படும் என்று உறுதியளிக்கிறேன். கட்ச் பகுதியின் மூலை முடுக்கெல்லாம் நர்மதா நீரை கொண்டு வருவோம். உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக ஆம் ஆத்மிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்."

இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார்.


Next Story