நாட்டு மக்களின் சிரமங்களை குறைப்பதில் கவனம் செலுத்துகிறோம் - பிரதமர் மோடி


நாட்டு மக்களின் சிரமங்களை குறைப்பதில் கவனம் செலுத்துகிறோம் - பிரதமர் மோடி
x

நாட்டு மக்களின் சிரமங்களை குறைப்பதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

கவுகாத்தி,

அசாம் மாநிலத்தில் பிஹு பண்டிகையை கொண்டாடி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று கவுகாத்தி சென்றுள்ளார். அசாம் மாநிலத்தின் கவுகாத்தியில் ரூ.1,123 கோடி செலவில் கட்டப்பட்ட வடகிழக்கு மாநிலத்தின் முதலாவது எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். மேலும் அசாமில் நல்பாரி, நாகோன் மற்றும் கோக்ரஜார் ஆகிய இடங்களில் 3 புதிய மருத்துவக் கல்லூரிகளை காணொளி மூலமாக பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

இதனையடுத்து, கவுகாத்தியில் உள்ள சருசஜாய் ஸ்டேடியத்தில் நடைபெறும் மெகா பிஹு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அவருடன் அசாம் முதல்-மந்திரி இமந்த பிஸ்வா சர்மாவும் பங்கேற்றார். அதில் பேசிய பிரதமர்,

இன்று, அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு எய்ம்ஸ், கவுகாத்தி மற்றும் மூன்று புதிய மருத்துவக் கல்லூரிகள் பரிசாக வழங்கப்பட்டுள்ளன. இன்று, வடகிழக்கு ரெயில் இணைப்பு தொடர்பான பல திட்டங்களும் தொடங்கப்பட்டுள்ளன.

நாங்கள் உங்களின் பணியாளர்கள் என்ற உணர்வுடன் பணியாற்றி வருகிறோம், அதிகார வேட்கை உள்ளவர்கள் நாட்டை ஆள்வதை மட்டுமே நோக்கமாக கொண்டு மக்களுக்கு பெறும் துன்பங்களை செய்துவிட்டார்கள். நாட்டு மக்களின் சிரமங்களை குறைப்பதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம் என்றார்.

மேலும், சட்டமன்றத் தேர்தலின் போது நான் இங்கு வந்தபோது, "ஏ பார் அசாம்" என்று மக்கள் சொல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று சொன்னது நினைவிருக்கிறது. இன்று அசாம் உண்மையிலேயே நம்பர் 1 மாநிலமாக மாறி வருகிறது என்று கூறியதோடு இந்த கொண்டாட்டம் அனைவரின் முயற்சி மூலம் வளர்ந்த இந்தியா என்ற நமது தீர்மானத்தை நிறைவேற்ற ஒரு உத்வேகமாக உள்ளது. இந்த உணர்வுடன், பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, வடகிழக்கு மற்றும் அசாமின் வளர்ச்சிக்காக பல திட்டங்கள் இன்று துவக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story