ஆட்டோக்களில் காணாமல் போன டிரைவர்களின் சுய விவர அட்டை!!!


ஆட்டோக்களில் காணாமல் போன டிரைவர்களின் சுய விவர அட்டை!!!
x

பெங்களூருவில் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஆட்டோக்களில் பொருத்தப்பட்ட டிரைவர்களின் சுயவிவர அட்டை தற்போது வைக்கப்படுவதில்லை. இதுபற்றி பொதுமக்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

பெங்களூரு:

டிரைவர்கள் மீது குற்றச்சாட்டு

பெங்களூரு நகரம் வேகமாக வளர்ந்து வருகிறது. பெங்களூரு நகரவாசிகளின் முக்கிய போக்குவரத்தாக அரசு பஸ்களும், ஆட்டோக்களும் உள்ளது. பெங்களூருவில் பல லட்சம் வாகனங்கள் உள்ளன. குறிப்பாக பெங்களூருவில் 1½ லட்சத்திற்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் ஓடுகின்றன. மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப நாளுக்கு நாள் ஆட்டோக்களின் தேவையும் அதிகமாகவே உள்ளது. அதற்கு ஏற்றார் போல் பெங்களூருவில் ஆயிரக்கணக்கான ஆட்டோக்கள் புதிதாக சாலைகளில் ஓடுகிறது.

ஆட்டோ டிரைவர்கள் என்றாலே பயணிகள் கூப்பிடும் இடத்திற்கு வர மறுப்பது, கூடுதல் கட்டணம் வசூலிப்பது, சாலைகளில் தாறுமாறாக செல்வது, சீருடை அணிவதில்லை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகிறது. இது எல்லா ஆட்டோ டிரைவர்களுக்கும் பொருந்துவதில்லை. ஏனெனில் வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து பெங்களூருவுக்கு வரும் பயணிகள், தாங்கள் போக வேண்டிய இடத்திற்கு செல்ல முடியாமல் பரிதவிக்கும் போது சற்று கூடுதல் கட்டணம் வசூலித்தாலும், அவர்கள் கூறும் இடத்திற்கு ஆட்டோ டிரைவர்கள் பத்திரமாக கொண்டு சேர்த்து விடுகிறார்கள்.

நேர்மையானவர்களுக்கு பாராட்டு

இன்னும் பல ஆட்டோ டிரைவர்களின் நேர்மையை சொல்லிக் கொண்டே போகலாம். ஏனெனில் நிறைய ஆட்டோ டிரைவர்கள் நேர்மையாக மீட்டர் கட்டணம் வசூலிப்பது, பயணிகள் அழைக்கும் இடத்திற்கு செல்வது, பயணிகள் தங்களது ஆட்டோக்களில் தவற விடும் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை, பணம் பொருட்களை சம்பந்தப்பட்ட பயணிகள் மற்றும் போலீசாரிடம் ஒப்படைத்து முன் மாதிரியாகவும் இருந்து வருகிறார்கள். அதுபோன்ற ஆட்டோ டிரைவர்களை பயணிகளும், போலீசாரும் பாராட்ட தவறுவது இல்லை.

ஆனால் பெங்களூருவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக ஆட்டோவில் இரவு நேரத்தில் தனியாக பயணிக்கும் பயணிகளிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பது, இளம்பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொள்வது போன்ற குற்ற செயல்களில் சில ஆட்டோ டிரைவர்கள் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. குறிப்பாக பெங்களூருவில் இரவு நேரத்தில் பயணித்த ஒரு கம்ப்யூட்டர் பெண் என்ஜினீயரை ஒரு ஆட்டோ டிரைவர் கடத்தி சென்று கற்பழித்ததுடன், அவரை கொலையும் செய்திருந்தார்.

டிரைவர்களின் விவரம்

இந்த சம்பவம் பெங்களூரு மட்டும் இன்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதையடுத்து, பெங்களூருவில் ஆட்டோக்கள் மற்றும் வாடகை கார்களில் பயணிக்கும் பெண்கள், பிற பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றங்களில் ஈடுபடும் ஆட்டோ டிரைவர்களை எளிதாக அடையாளம் காணும் விதமாகவும் போக்குவரத்து போலீசாரால் ஒரு திட்டம் கொண்டு வரப்பட்டது. அது ஆட்டோக்களில் டிரைவர்களின் சுய விவர அடையாள அட்டையை (டிஸ்பிளே கார்டு) பொருத்துவதாகும்.

அதாவது ஆட்டோ டிரைவர்களின் இருக்கை பின்னால் பயணிகளுக்கு அமர்ந்திருக்கும் இருக்கைக்கு முன்னால் அந்த சுய விவர அட்டை ஒட்டப்பட்டு இருக்கும். அதில் ஆட்டோ டிரைவரின் பெயர், முகவரி, அவரது ஓட்டுனர் உரிமம் எண், ஆட்டோ டிரைவரின் புகைப்படம், ஆட்டோவின் பதிவு எண் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இடம் பெற்றிருக்கும். பயணிகள் ஆட்டோவில் ஏறி அமர்ந்ததும், டிரைவர் பற்றி அனைத்து தகவல்களையும் அந்த சுய விவர அட்டை மூலம் அறிந்து கொள்ள முடியும்.

பயணிகள், போலீசாருக்கு உதவி

ஒரு வேலை ஆட்டோவில் பயணிக்கும் போது டிரைவர் ஏதேனும் அசம்பாவித சம்பவங்களில் ஈடுபட்டாலோ, பயணி கூறிய இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு செல்வதாக தெரிந்தாலோ, இளம்பெண்களிடம் தவறாக நடக்க முயன்றாலோ, ஏதேனும் குற்றங்களில் ஈடுபட்டாலோ, போலீசாருக்கோ அல்லது தங்களது உறவினர்களுக்கோ சம்பந்தப்பட்ட பயணிகள் தகவல் தெரிவிக்க முடியும். அதாவது டிரைவர்களின் சுய விவர அட்டையை செல்போனில் படம் பிடித்து உறவினர்களுக்கு அனுப்ப முடியும்.

இதன்மூலம் ஏதேனும் அசம்பாவிதங்களில் ஈடுபடும் ஆட்டோ டிரைவர்களை போலீசார் எளிதில் கைது செய்ய முடியும். ஏனெனில் ஒரு சில டிரைவர்கள் ஆட்டோவின் வாகன பதிவு எண்ணை போலியாக ஒட்டி சுற்றி திரிவதாலும், வாகன பதிவு எண் மூலமாக டிரைவரை கண்டுபிடிக்க தாமதம் ஏற்படும் என்பதாலும், இந்த சுய விவர அட்டையை பயணிகளின் இருக்கைக்கு முன்னால் ஒட்டி வைக்க போக்குவரத்து போலீசார் உத்தரவிட்டு இருந்தனர்.

சுய விவர அட்டை மாயம்

அதன்படி, பெங்களூரு நகரில் உள்ள பெரும்பாலான ஆட்டோக்களில் டிரைவர்கள் பற்றிய தகவல்களுடன் கூடிய அட்டை பயணிகளுக்கும், போலீசாருக்கும் உதவிகரமாக இருந்தது. தற்போது இந்த சுய விவர அட்டை பெரும்பாலான ஆட்டோக்களில் மாயமாகி வருகிறது. குறிப்பாக புதிதாக நகரில் ஓடும் ஆட்டோக்களில் டிஸ்பிளே கார்டுகள் இருப்பதில்லை. அதற்கு பதிலாக ஓலா, ஊபர் நிறுவனங்களின் விளம்பர படங்களில், பயணிகள் பணம் செலுத்துவதற்காக கியூ.ஆர்.கோடு ஒட்டப்பட்டு இருப்பதை காண முடிகிறது.

டிரைவர்கள் பற்றிய சுயவிவர அட்டை இல்லாமலேயே ஏராளமான ஆட்டோக்கள் பெங்களூருவில் வலம் வருகின்றன. ஆண்டுக்கு ஒருமுறை ஆட்டோ டிரைவர்கள் சுய விவர அட்டையை புதுப்பிக்க வேண்டும். இதனை போக்குவரத்து போலீசார் கண்காணிக்க வேண்டும். அதே நேரத்தில் அந்த அட்டை இல்லாமல் வலம் வரும் ஆட்டோக்களை கண்டுபிடித்து அபராதம் விதிப்பது, கண்டிப்பாக ஆட்டோக்களில் சுய விவர அட்டை ஒட்ட வேண்டும் என்ற விதிமுறைகளை அமல்படுத்துவதில் போக்குவரத்து போலீசார் அலட்சியம் காட்டி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

பயணிகளின் பாதுகாப்பு

பெங்களூருவுக்கு வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து தினமும் லட்சக்கணக்கானோர் வருகிறார்கள். அவர்கள் நள்ளிரவில் பஸ்களை நாடிச் செல்வதை விட ஆட்டோக்களிலேயே பயணிக்கின்றனர். குறிப்பாக வேலைக்காக பெங்களூருவுக்கு வரும் இளம்பெண்களும், பிற நிறுவனங்களில் பணியாற்றிவிட்டு வீட்டுக்கு செல்லும் பெண்களும் நள்ளிரவில் தனியாக ஆட்டோக்களில் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.

எனவே ஆட்டோக்களில் பயணிக்கும் பெண்கள் மற்றும் பிற பயணிகளின் பாதுகாப்பை அதிகரிக்கவும், ஆட்டோ டிரைவர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளவும் சுய விவர அட்டையை கண்டிப்பாக ஆட்டோவில் ஒட்டும் நடைமுறையை போக்குவரத்து போலீசார் தீவிரப்படுத்துவதுடன், அதனை தீவிரமாக கண்காணிக்கும் படியும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுபற்றி பொதுமக்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளனர். அதுபற்றிய விபரம் வருமாறு:-

மோசமானவர்கள் இல்லை

இதுபற்றி கம்ப்யூட்டர் என்ஜினீயர் கலை கூறும்போது, "பெங்களூருவில் கம்ப்யூட்டர் பெண் என்ஜினீயர் கொலை செய்யப்பட்ட பின்பு போலீசாரும், அரசும் இணைந்து ஆட்டோக்களில் டிரைவர்களின் சுய விவர அட்டை ஒட்ட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வரப்பட்ட இந்த திட்டத்தை நிறுத்தாமல் தொடர வேண்டும். ஆட்டோ டிரைவர்கள் அனைவரும் விதிமுறைகளை மீறுவதில்லை. இது பயணிகளின் பாதுகாப்பை கருதி கொண்டு வந்தது என்பதால், ஆட்டோக்களில் டிரைவர்கள் தங்களை சுய விவரம் பற்றி தகவல்களை கூறும் டிஸ்பிளே கார்டுகளை ஒட்டலாம் " என்றார்.

ஆட்டோ டிரைவர் உஸ்மான் கூறும் போது, "ஆட்டோக்களில் டிரைவர்கள் தங்களை பற்றிய சுய விவர அட்டையை ஒட்டுவது நல்லது. சமயத்தில் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் உதவியாக இருக்கும். எங்கள் தகவல்களை தெரிந்து கொண்டு, சிலர் தொந்தரவு கொடுக்கவும் செய்கிறார்கள். எங்களது வீட்டு முகவரியை தெரிந்து கொண்டு திருட்டு உள்ளிட்ட விபரீதங்களில் ஈடுபட வாய்ப்புள்ளது. ஆட்டோக்கள், வாடகை கார்களின் டிரைவர்களை மட்டும் குறி வைத்து சுய விவர அட்டையை ஒட்ட வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆட்டோ டிரைவர்கள் அனைவரும் மோசமானவர்கள் இல்லை. பயணிகள் எங்களுக்கு கடவுளுக்கு சமமானவர்கள்" என்றார்.

பெண்களுக்கு உதவி

இதுபற்றி மகளிர் அமைப்பை சேர்ந்த ஹனி கூறுகையில், " பெங்களூருவில் ஆயிரக்கணக்கான பெண்கள் தனியார் நிறுவனங்களில் பணியாற்றிவிட்டு இரவில் தனியாக ஆட்டோவில் வருகிறார்கள். அந்த சந்தர்ப்பத்தில் சில பெண்களுக்கு தொந்தரவு ஏற்படுகிறது. ஆட்டோ டிரைவர்கள் பற்றிய தகவல் இருந்தால் புகார் அளிக்கவோ, உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கவோ உதவியாக இருக்கும். ஆட்டோ டிரைவர்கள் அனைவரும் கெட்டவர்கள் இல்லை.

பெண்களுக்கு எதிராக தற்போது பல வன்முறைகள் நடக்கிறது. எனவே பெண்களின் பாதுகாப்பு மிக முக்கியம். ஆட்டோக்கள், வாடகை கார்களில் டிரைவர்கள் தகவலை தெரிவிக்கும் சுய விவர அட்டை கண்டிப்பாக இருக்க வேண்டும். இது ஆட்டோவில் தனியாக பயணிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்கும்"என்றார்.

அதிக கட்டணம் வசூல்

பெங்களூரு ராமசந்திரபுரத்தை சேர்ந்த சாந்தி கூறும் போது, "ஆட்டோ டிரைவர்கள் பயணிகள் அழைக்கும் இடத்திற்கு வருவதில்லை. ரூ.30 கட்டணத்திற்கு ரூ.60 கேட்கிறார்கள். பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதமாக ஆட்டோக்களில் கண்டிப்பாக டிரைவர்களின் சுய விவர அட்டையை பொருத்த வேண்டும். அதிக கட்டணம் வசூலிக்கும் போது உடனடியாக போலீசாரை தொடர்பு கொள்ள முடியாது. டிரைவர்களின் சுய விவர அட்டை மூலமாக ஆட்டோ டிரைவர் பற்றி தெரிந்து, சமூக வலைத்தளம் மூலமாக கூட புகார் அளிக்க உதவியாக இருக்கும். எனவே ஆட்டோக்களில் கண்டிப்பாக டிரைவர்களின் சுய விவர அட்டை இருக்க வேண்டும்" என்றார்.

ஒரே ஆட்டோவுக்கு 3 டிரைவர்கள்

பெங்களூருவில் லட்சக்கணக்கான ஆட்டோக்கள் ஓடுகின்றன. இவ்வாறு ஓடும் ஆட்டோக்களை ஓட்டும் டிரைவர்கள், அதன் உரிமையாளர்களாக இருப்பதில்லை. டிரைவர் ஒருவராகவும், உரிமையாளர் மற்றொருவருமாகவே உள்ளார். பெரும்பாலான ஆட்டோக்கள் வாடகை அடிப்படையிலேயே ஓட்டப்படுகிறது. ஒருவர் புதிதாக ஆட்டோ வாங்கினால், அதனை வாடகைக்கு விட்டு விடுவார். 3 ஷிப்ட் அடிப்படையில் அந்த ஆட்டோவை டிரைவர்கள் வாடகைக்கு ஓட்டுவார்கள். சில ஆட்டோக்களை 2 டிரைவர்கள் ஓட்டி வருகிறார்கள். இதன்மூலம் உரிமையாளர் பெயரில் ஆட்டோ இருந்தாலும், டிரைவர்கள் 2 அல்லது 3 பேர் இருக்கிறார்கள். இதுபோன்ற காரணங்களாலும் பல ஆட்டோக்களில் டிரைவர் பற்றிய விவரங்களை வைக்கமுடியவில்லை என்று சில ஆட்டோ டிரைவர்கள் கூறினர்.


Next Story