ஹாசன் வேட்பாளர் யார் என்பதை தேவேகவுடா அறிவிப்பார்; பிரஜ்வல் ரேவண்ணா பேச்சு
ஹாசன் வேட்பாளர் யார் என்பதை ஜனதா தளம் (எஸ்) கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா அறிவிப்பார் என்று பிரஜ்வல் ரேவண்ணா கூறியுள்ளார்.
ஹாசன்:
ஹாசன் வேட்பாளர் யார் என்பதை ஜனதா தளம் (எஸ்) கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா அறிவிப்பார் என்று பிரஜ்வல் ரேவண்ணா கூறியுள்ளார்.
ஹாசன் தொகுதி
கர்நாடகத்தில் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதா தளம் (எஸ்) ஆகிய கட்சிகள் போட்டியிடுகிறது. இந்நிலையில் ஜனதா தளம் (எஸ்) தனது வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. முதல் கட்ட பட்டியல் வெளியாகிவிட்டது. 2-வது கட்ட பட்டியல் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஹாசன் தொகுதியில் ஜனதா தளம் (எஸ்) வேட்பாளர் யார் என்பது குறித்த போட்டி நிலவி வருகிறது.
ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரியும், குமாரசாமியின் சகோதரருமான ரேவண்ணாவின் மனைவி பவானி ரேவண்ணா ஹாசன் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். அந்த இடத்தில் குமாரசாமி தனக்கு விருப்பமானவரை போட்டியிட திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சகோதரர்களுக்கு மோதல் ஏற்படும் சூழ்நிலை நிலவி வருகிறது.
தேவேகவுடா அறிவிப்பார்
இருப்பினும் பவானி ரேவண்ணா நான் அந்த தொகுதியை விட்டு கொடுப்பது இல்லை என்று கூறியுள்ளார். இந்நிலையில் பவானி ரேவண்ணாவிற்கு ஆதரவாக நேற்று ஜனதா தளம் (எஸ்) கட்சியை சேர்ந்த தொண்டர்கள் ஹாசன் எம்.பி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு வந்த சூரஜ் ரேவண்ணா பேசும்போது:-
ஹாசன் தொகுதியில் யார் போட்டியிடவேண்டும் என்பதை தேவேகவுடா தலைமையில் ஆலோசனை நடைபெறும். அவர் யாரை நிறுத்துகிறாரே, அவரே வேட்பாளர். இதில் குமாரசாமி தலையிடுவதற்கு எந்த அதிகாரமும் இல்லை. என்னையும், என் சகோதரரையும் தேர்தலில் போட்டியிட செய்தவர் ஜனதா தளம் (எஸ்) கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடாதான். இந்த ஹாசன் தொகுதி வேட்பாளரையும் அவரே அறிவிப்பார் என்றார்.
குமாரசாமி தலையிடகூடாது
இதை தொடர்ந்து பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி கூறியதாவது:-15 ஆண்டுகளாக ஹாசனில் ஜனதா தளம் (எஸ்) கட்சி தொடர்ந்து வெற்றி பெற்றது. கடந்த முறை தோல்வியடைந்தது. இந்த முறை பவானி ரேவண்ணா போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
மீண்டும் ஜனதா தளம் (எஸ்) கட்சி ஆட்சியை பிடிக்கவேண்டும் என்ற முனைப்புடன் பவானி ரேவண்ணாபோட்டியிடுகிறார். தேவேகவுடாவே யார் வேட்பாளர் என்று அறிவிப்பார். இதில் குமாரசாமி தலையிடுவது ஏற்புடையது அல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.