கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக பி.பி.வரலே பதவி ஏற்பு
கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக பி.பி.வரலே பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு, கவர்னர் தாவர்சந்த் கெலாட் பதவி பிரமாணம் செய்து வைத்தார். புதிய தலைமை நீதிபதிக்கு, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வாழ்த்து தெரிவித்தார்.
பெங்களூரு:
கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக பி.பி.வரலே பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு, கவர்னர் தாவர்சந்த் கெலாட் பதவி பிரமாணம் செய்து வைத்தார். புதிய தலைமை நீதிபதிக்கு, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வாழ்த்து தெரிவித்தார்.
தலைமை நீதிபதி பதவி ஏற்பு
கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த ரிதுராஜ் அவஸ்தி பதவி உயர்வு பெற்று, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டு இருந்தார். இதன் காரணமாக கர்நாடக ஐகோர்ட்டுக்கு தலைமை நீதிபதி நியமிக்கப்படாமல் இருந்தது. கர்நாடக ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக (பொறுப்பு) அலோக் அராதே இருந்து வருகிறார். இந்த நிலையில், கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக, மும்பை ஐகோர்ட்டு நீதிபதியாக பணியாற்றிய பிரசன்ன பாலசந்திர வரலே (பி.பி.வரலே) நியமிக்கப்பட்டு இருந்தார்.
மேலும் அவர், அக்டோபர் 15-ந் தேதி(அதாவது நேற்று) பதவி ஏற்பார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, பெங்களூரு ராஜ்பவன் ரோட்டில் உள்ள கவர்னர் மாளிகையில் வைத்து கர்நாடக ஐகோர்ட்டு புதிய தலைமை நீதிபதி பதவி ஏற்பு விழா நேற்று காலையில் நடைபெற்றது. இதில், கவர்னர் தாவர்சந்த் கெலாட் கலந்து கொண்டு, புதிய தலைமை நீதிபதி பி.பி.வரலேவுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். மேலும் புதிய தலைமை நீதிபதிக்கு, கவர்னர் தாவர்சந்த் கெலாட் பூச்செண்டு கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
பசவராஜ் பொம்மை வாழ்த்து
இந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையும் கலந்து கொண்டு, புதிய தலைமை நீதிபதி பி.பி.வரலேவுக்கு பூச்செண்டு கொடுத்து வாழ்த்து கூறினார். கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக பதவி ஏற்றுள்ள பி.பி.வரலே, கடந்த 1962-ம் ஆண்டு ஜூன் மாதம் 23-ந் தேதி மராட்டிய மாநிலம் நிபானி அருகே நிம்பள்ளியில் பிறந்தவர் ஆவார்.
அந்த மாநிலத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் மராட்டா பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பு படித்திருந்தார். மூத்த வக்கீலான என்.என்.லோகி என்பவரிடம் உதவியாளராக சேர்ந்து வக்கீல் தொழிலை அவர் தொடங்கி இருந்தார். 2008-ம் ஆண்டு மும்பை ஐகோர்ட்டு நீதிபதியாக பி.பி.வரலே பதவி ஏற்றார். புதிய தலைமை நீதிபதியாக பதவி ஏற்றுள்ள பி.பி.வரலேவுக்கு கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதிகள் மற்றும் வக்கீல் சங்கத்தினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.