வருகிற நவம்பரில் ஆர்.வி.ரோடு-பொம்மசந்திரா இடையே மெட்ரோ ரெயில் சேவை தொடங்கும்; துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி
பெங்களூரு ஆர்.வி.ரோடு-பொம்மசந்திரா இடையே மெட்ரோ ரெயில் சேவை வருகிற நவம்பரில் தொடங்கும் என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
பெங்களூரு:
பெங்களூரு ஆர்.வி.ரோடு-பொம்மசந்திரா இடையே மெட்ரோ ரெயில் சேவை வருகிற நவம்பரில் தொடங்கும் என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
திட்ட பணிகள்
துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூரு மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகளுடன் பெங்களூருவில் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் குறித்து அவர் விவரங்களை கேட்டு அறிந்தார். இந்த கூட்டத்திற்கு பிறகு டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பெங்களூரு மெட்ரோ ரெயில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி திட்டங்களின் நிலை குறித்து தகவல் பெற்றுள்ளேன். டெல்லிக்கு அடுத்தபடியாக பெங்களூரு மெட்ரோ ரெயில் நிறுவனம் அதிகளவில் சேவையை வழங்கி வருகிறது. உலக தரத்தில் மெட்ரோ ரெயில் போக்குவரத்து சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் லாபத்தில் இயங்குகிறது. அனைத்து செலவுகளும் போக மாதம் ரூ.6 கோடி மீதமாகிறது.
சாத்தியக்கூறு பணிகள்
பயண கட்டணத்தை தவிர பிற ஆதாரங்கள் மூலம் வருமானத்தை பெருக்குவது குறித்து நான் சில ஆலோசனைகளை வழங்கினேன். விளம்பரங்களை மேற்கொள்ள இருக்கும் சிக்கல்களுக்கு தீர்வு காணப்படும். மெட்ரோ ரெயில்களுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்கப்படுகிறது. இதற்கான கட்டணத்தை மேலும் குறைப்பது குறித்து ஆலோசனை நடத்தினேன்.
3-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தின் கீழ் சர்ஜாப்புராவில் இருந்து ஹெப்பால் வரைக்கும் மெட்ரோ ரெயில் பாதை அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. பையப்பனஹள்ளியில் இருந்து கே.ஆர்.புரம் வரையிலான மெட்ரோ ரெயில் சேவை வருகிற ஜூலை மாதம் தொடங்கப்படும். கெங்கேரி-சல்லகட்டா பாதையில் சேவை வருகிற ஆகஸ்டு அல்லது செப்டம்பர் மாதத்தில் தொடங்க வாய்ப்பு உள்ளது.
நவம்பரில் தொடங்கும்
நாகசந்திரா-மாதவரா இடையிலான பாதை வருகிற செப்டம்பருக்குள் தயாராகிவிடும் என்று எதிர்பார்க்கிறோம். ஆர்.வி.ரோடு-பொம்மசந்திரா இடையே மெட்ரோ ரெயில் சேவை வருகிற அக்டோபர் அல்லது நவம்பரில் தொடங்கப்படும். சில்க் போர்டு-சர்வதேச விமான நிலைய மெட்ரோ ரெயில் பாதை பணிகள் வருகிற 2026-ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் நிறைவடையும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
3-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு மத்திய அரசு இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை. இது தொடர்பாக நான் டெல்லிக்கு சென்று சம்பந்தப்பட்ட மத்திய மந்திரிகளை நேரில் சந்திக்க உள்ளேன். மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் இரவில் நடைபெறுகிறது. போக்குவரத்து நெரிசல் காரணமாக பகலில் சிமெண்டு உள்ளிட்ட பொருட்களை கொண்டுவர முடியவில்லை என்று அதிகாரிகள் கூறினர். இந்த பணிகளுக்கு போலீசார் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.