கர்நாடகத்தில் மழலையர் பள்ளியில் தேசிய கல்வி கொள்கை அமல்
கர்நாடகத்தில் 2023-24-ம் ஆண்டு முதல் மழலையர் பள்ளியில் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் கூறியுள்ளார்.
பெங்களூரு:
கர்நாடகத்தில் 2023-24-ம் ஆண்டு முதல் மழலையர் பள்ளியில் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் கூறியுள்ளார்.
பெங்களூருவில் நடைபெற்ற கர்நாடக ராஜ்யோத்சவா விழாவில் பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் பேசியதாவது:-
உள்ளூர் கலாசாரம்
கர்நாடகத்தில் புதிய தேசிய கல்வி கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த கல்வி ஆண்டு முதல் அந்த கொள்கையில் உள்ள அம்சங்கள் முழுமையாக செயல்படுத்தப்படும். இதனால் கல்வித்துறையில் சீர்திருத்தம் ஏற்பட உள்ளது. அந்த கொள்கையில் உள்ள அனைத்து அம்சங்களையும் செயல்படுத்துவோம். அந்த கொள்கை குறித்த கன்னட புத்தகம் அனைத்து ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. 3 முதல் 8 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டிய பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. அது ஆங்கிலத்தில் இருக்கிறது. அதை கன்னடத்தில் மொழிமாற்றம் செய்துள்ளோம்.
தேசிய கல்வி கொள்கை பாடத்திட்டத்தின்படி உள்ளூர் கலாசாரத்தை உள்ளடக்கிய பாடத்திட்டத்தை மழலையர் பள்ளிகளில் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளி கல்வியில் அனைத்து நிலையிலும் கன்னடம் பயன்படுத்தப்படுகிறது. பள்ளி கல்வித்துறையில் கர்நாடகத்தில் 1 கோடியே 5 லட்சம் குழந்தைகள் படிக்கிறார்கள். புதிதாக 8,100 வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்படுகின்றன.
நேரடியாக வகுப்புகள்
குழந்தைகளின் எதிர்காலத்தை கட்டமைப்பதில் ஆசிரியர்களின் பங்கு மகத்தானது. நமது மாநிலம், கலாசாரத்தை காக்க வேண்டும். அதை குழந்தைகளுக்கு தெரிவிக்க வேண்டியது நமது பொறுப்பு. 100 உயர் தொடக்க பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகள் குழந்தைகளுக்கு நேரடியாக வகுப்புகள் நடத்த முடியவில்லை. அதனால் குழந்தைகளின் கற்றலில் ஏற்பட்டுள்ள குறையை சரிசெய்ய கற்றல் சீர்திருத்தம் என்ற திட்டத்தை அமல்படுத்தி இருக்கிறோம். வேறு எந்த மாநிலத்திலும் இத்தகைய திட்டம் அமல்படுத்தப்படவில்லை.
இவ்வாறு பி.சி.நாகேஸ் பேசினார்.