சப்-இன்ஸ்பெக்டா் தேர்வு முறைகேடு வழக்கில் பெங்களூரு கோர்ட்டில் 3,065 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்


சப்-இன்ஸ்பெக்டா் தேர்வு முறைகேடு வழக்கில் பெங்களூரு கோர்ட்டில் 3,065 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்
x

சப்-இன்ஸ்பெக்டர் தோ்வு முறைகேடு வழக்கில் பெங்களூரு கோர்ட்டில் 3,065 பக்கங்களை கொண்ட முதற்கட்ட குற்றப்பத்திரிகையை சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்துள்ளனர். இதில் கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. அம்ருத்பாலின் பெயர் சேர்க்கப்படவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

பெங்களூரு:

சப்-இன்ஸ்பெக்டர் தோ்வு முறைகேடு வழக்கில் பெங்களூரு கோர்ட்டில் 3,065 பக்கங்களை கொண்ட முதற்கட்ட குற்றப்பத்திரிகையை சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்துள்ளனர். இதில் கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. அம்ருத்பாலின் பெயர் சேர்க்கப்படவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு

கர்நாடகத்தில் 545 சப்-இன்ஸ்பெக்டர் பணிகளுக்கு கடந்த ஆண்டு(2021) அக்டோபர் மாதம் தேர்வு நடைபெற்றிருந்தது. இந்த தேர்வுக்கான முடிவுகள் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி இருந்தது. தேர்வு முடிவுகள் வெளியான பின்பு சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, இந்த முறைகேடு தொடர்பாக அரசின் உத்தரவின் பேரில் சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தொடங்கினாா்கள்.

போலீஸ் விசாரணையில், சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் முறைகேடு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டதால், 545 சப்-இன்ஸ்பெக்டர் பணிகளுக்கு நடந்த தேர்வை அரசு ரத்து செய்துள்ளது. அப்பணிகளுக்கு மீண்டும் ஆட்கள் தேர்வு செய்யப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதற்கிடையில், சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு தொடர்பாக பெங்களூரு ஐகிரவுண்டு, கலபுரகி மாவட்ட போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

குற்றப்பத்திரிகை தாக்கல்

இந்த வழக்கில் போலீஸ் நியமன பிரிவு முன்னாள் கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. அம்ருத் பால், துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தகுமார் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் அதிகாரிகள், காங்கிரஸ், பா.ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள், முறைகேடாக தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள் என 40-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் ஐகிரவுண்டு போலீஸ் நிலையத்தில் கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. அம்ருத் பால் 36-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், சி.ஐ.டி. போலீசார், பெங்களூரு முதலாவது கூடுதல் மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் இவ்வழக்கு தொடர்பாக முதற்கட்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். அந்த குற்றப்பத்திரிகை 3,065 பக்கங்களை கொண்டதாக உள்ளது.

இந்த குற்றப்பத்திரிகை மொத்தம் 35 குற்றவாளிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அம்ருத்பால் பெயர்...

மேலும் 202 சாட்சிகள் அளித்த தகவல்கள், 330 ஆதாரங்களும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டு இருக்கிறது. ஆனால் குற்றப்பத்திரிகையில் கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. அம்ருத்பாலுக்கு எதிராக தாக்கல் செய்யப்படவில்லை. அதாவது அவரது பெயர் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்படவில்லை.

அவர் மீது விசாரணை நடத்தப்பட்டு வருவதாலும், போலீஸ் விசாரணையின் போது அவர் எந்த விதமான தகவல்களையும் தெரிவிக்காமல் இருந்ததாலும் அவரது பெயர் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்படவில்லை என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கூடுதலாக தாக்கல் செய்யப்படும் குற்றப்பத்திரிகையில் அம்ருத்பாலுக்கு எதிராக சாட்சிகள், ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


Next Story