காவிரி விவகாரத்தில் தேவையற்ற பிரச்சினையை கிளப்பும் தமிழகம்; முதல்-மந்திரி சித்தராமையா குற்றச்சாட்டு
காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் தமிழகம் தேவையற்ற பிரச்சினையை கிளப்புகிறது என்று முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.
மைசூரு:
காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் தமிழகம் தேவையற்ற பிரச்சினையை கிளப்புகிறது என்று முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.
தேவையற்ற பிரச்சினை
மைசூருவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக முதல்-மந்திரி சித்தராமையா நேற்று பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் மைசூருவுக்கு வந்தார். மைசூரு மண்டஹள்ளி விமான நிலையத்தில் சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் தமிழக அரசு தேவையற்ற பிரச்சினையை கிளப்புகிறது. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட அனுமதி வழங்குவதில் பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு காலதாமதம் செய்கிறது. இரு மாநிலங்கள் இடையே நிலவும் காவிரி நதி நீர் பிரச்சினைக்கு மேகதாது அணை மட்டுமே ஒரே தீர்வு. ஆனால் இதற்கு மத்திய பா.ஜனதா அரசு அனுமதி வழங்கவில்லை. மேகதாது திட்டத்தை தமிழகம் எதிர்ப்பதற்கு எந்த காரணமும் இல்லை.
இடர்பாட்டு சூத்திரம்
தமிழகத்துக்கு காவிரியில் ஆண்டுக்கு 177.25 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) தண்ணீர் திறக்க வேண்டும். மழை காலத்தில் குறிப்பிட்ட அளவை விட கூடுதலாக தண்ணீர் திறந்து விட்டு வருகிறோம். ஆனால், இடர்பாட்டு நேரத்தில் இடர்பாட்டு சூத்திரத்தை பின்பற்ற வேண்டும். மேகதாது திட்டத்தில் தமிழகம் தேவையில்லாத பிரச்சினைகளை உருவாக்கி வருகிறது. இந்த திட்டத்துக்கு விரிவான திட்ட அறிக்கை (டி.பி.ஆர்.) அளித்தும் மத்திய அரசு இன்னும் அனுமதி வழங்காமல் உள்ளது.
மேகதாது திட்டத்துக்கு அனுமதி வழங்குமாறு காவிரி மேலாண்மை ஆணையத்திடம் மத்திய அரசு கூற வேண்டும். ஆனால் மத்திய அரசு அதனை செய்யவில்லை. அனைத்துக்கட்சி கூட்டத்தில் பா.ஜனதாவினர் காவிரி நதிநீர் விவகாரத்தில் அரசியல் செய்ய மாட்டோம் என தெரிவித்தனர். ஆனால், தற்போது காவிரி விவகாரத்தில் பா.ஜனதாவினர் அரசியல் செய்து வருகிறார்கள்.
மகிழ்ச்சியுடன் திறக்கவில்லை
காவிரி படுகையில் போதிய மழை பெய்யாததால் அணைகளில் தண்ணீர் குறைவான அளவே இருந்த போதிலும் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவின்பேரில் தண்ணீரை திறந்து விட்டுள்ளோம். நாங்கள் மகிழ்ச்சியுடன் தண்ணீரை திறந்து விடவில்லை. விவசாயிகளின் நலன், மைசூரு, பெங்களூரு உள்பட பல்வேறு மாவட்டங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய அரசு கடமைப்பட்டுள்ளது.
நீா் கொள்கையில் குடிநீருக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். அதன்பிறகு தான் பயிர்களை பாதுகாக்க வேண்டும். தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டை அணுகியும் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. வருகிற 21-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் காவிரி வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. அப்போது கர்நாடகத்தின் உண்மை நிலையை அரசு எடுத்து வைக்கும். நாளை (அதாவது இன்று) நடக்கும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் எங்களின் நிலைப்பாட்டை தெரிவிப்போம்.
அரசியல் செய்யாது
காவிரி விவகாரத்தில் அரசு எந்த வகையிலும் அரசியல் செய்யாது. மாநிலம் மற்றும் விவசாயிகளின் நலனில் நாங்கள் சமரசம் செய்ய மாட்டோம். ஆகஸ்டு இறுதி வரை தமிழகத்துக்கு 86 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட வேண்டும் மேலாண்மை ஆணையம் கூறியது. ஆனால் நாங்கள் அதில் பாதியை கூட விடவில்லை.
கர்நாடகத்தில் பா.ஜனதாவுக்கு 25 எம்.பி.க்கள் உள்ளனர். அவர்கள் எப்போது மாநிலத்திற்காக நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தினார்கள்?. அனைத்துக்கட்சி தலைவர்களுடன் பிரதமரை சந்திக்க கடிதம் எழுதியும் இதுவரை எந்த பதிலும் வரவில்லை. கர்நாடக பா.ஜனதா தலைவர்கள் பிரதமரிடம் சென்று பேசட்டும். எங்களுக்கு பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்கப்படாது. அவர்களும் (பா.ஜனதா) பிரதமரிடம் சென்று எதுவும் பேச மாட்டார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.