கர்நாடகத்தில் வெற்றி வாகை சூடப்போவது யார்? மல்லு கட்டும் பா.ஜனதா- காங்கிரஸ்


கர்நாடகத்தில் வெற்றி வாகை சூடப்போவது யார்? மல்லு கட்டும் பா.ஜனதா- காங்கிரஸ்
x

கோப்பு படம் (பிடிஐ)

தினத்தந்தி 12 April 2024 7:15 AM GMT (Updated: 12 April 2024 10:12 AM GMT)

. கர்நாடகத்தில் வருகிற 26-ந்தேதி மற்றும் மே 7-ந் தேதி என 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் மொத்தம் 28 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 28 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு 25 இடங்களில் வெற்றிபெற்றது. கூட்டணி அமைத்து போட்டியிட்ட காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) கட்சிகளால் தலா ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. ஒரு இடத்தில் சுயேச்சை வெற்றி பெற்றார்.

கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 135 இடங்களை பெற்ற காங்கிரஸ் கட்சி, பல ஆண்டுகளுக்கு பிறகு பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. மூத்த தலைவர் சித்தராமையா முதல்-மந்திரியானார். மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் துணை முதல்-மந்திரியாக உள்ளார்.

66 இடங்களை மட்டும் பிடித்த பா.ஜனதா ஆட்சியை பறிகொடுத்தது. ஜனதா தளம் (எஸ்) 19 இடங்களையே பெற முடிந்தது.இந்த தேர்தல் மூலம் கர்நாடகத்தில் காங்கிரஸ் மீண்டும் எழுச்சி பெற்றது.

இந்தநிலையில் தற்போதைய நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. கர்நாடகத்தில் வருகிற 26-ந்தேதி மற்றும் மே 7-ந் தேதி என 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பா.ஜனதாவுடன் ஜனதா தளம் (எஸ்) கூட்டணி அமைத்துள்ளது. காங்கிரஸ் கட்சி இந்தியா கூட்டணி என்ற பெயரில் தேர்தலை சந்திக்கிறது. எனவே கர்நாடகத்தில் இருமுனை போட்டி நிலவுகிறது.

சட்டசபை தேர்தலில் பெற்ற வெற்றியின் உற்சாகத்தில், நாடாளுமன்ற தேர்தலை காங்கிரஸ் நம்பிக்கையுடன் எதிர்கொள்கிறது. முதல்-மந்திரி சித்தராமையாவும், துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரும் போர்ப்படை தளபதிகளாக இந்த தேர்தலை வழி நடத்துகிறார்கள்.

மேலும் காங்கிரஸ் கட்சியின் கடந்த ஓராண்டு சாதனைகளாக பெண்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை, கிரகஜோதி திட்டத்தின் மூலம் எந்த கட்டுப்பாடும் இன்றி வீடுகளுக்கு மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம் ஆகிய திட்டங்கள் தங்களுக்கு கைகொடுக்கும் என்கிறார்கள்.

கர்நாடகத்தில் பா.ஜனதா வலுவாக உள்ளது. இருப்பினும் இந்த தேர்தலில் ஜனதாதளம் (எஸ்) கட்சியுடன் கூட்டணி அமைத்து உள்ளது, பா.ஜனதாவுக்கு கூடுதல் பலம் கொடுக்கும் என்று கருதப்படுகிறது.

கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சியை பிடித்திருந்தாலும், அக்கட்சியால் இதுவரை தனிப்பெரும்பான்மை பலத்தை பெற முடியவில்லை. காரணம், அக்கட்சியால் தென் கர்நாடகத்தில் வலுவாக காலூன்ற முடியவில்லை.

அந்த பகுதியில் காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் இடையே தான் பிரதான போட்டி நிலவுகிறது. தென் கர்நாடகத்தில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா தலைமையிலான ஜனதா தளம் (எஸ்) கட்சி வலுவாக உள்ளது. இந்த பகுதியில் ஒக்கலிகர் சமூக மக்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். அந்த சமூகத்தை சேர்ந்த தேவேகவுடாவின் கட்சிக்கு அந்த சமூகம் ஆதரவு அளிக்கிறது. இதன் மூலம் தங்கள் கூட்டணி அதிக தொகுதிகளை அறுவடை செய்யும் என்று பா.ஜனதா மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சியினர் நம்புகிறார்கள்.

தற்போதைய நாடாளுமன்ற தேர்தலில் மண்டியா தொகுதியில் பா.ஜனதா கூட்டணியில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமியும், மைசூரு தொகுதியில் மன்னர் யதுவீரும், ஹாவேரியில் முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, சிவமொக்காவில் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திராவும் பெங்களூரு வடக்கு தொகுதியில் மத்திய மந்திரி ஷோபாவும், தார்வார்-உப்பள்ளி தொகுதியில் மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி ஆகிய பிரபலங்கள் களம் இறங்கியுள்ளனர்.

இதேபோல காங்கிரசில் பெங்களூரு புறநகர் தொகுதியில் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரின் சகோதரர் டி.கே.சுரேஷ் எம்.பி.யும், கலபுரகியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மருமகன் ராதாகிருஷ்ணனும், சிவமொக்காவில் முன்னாள் முதல்-மந்திரி பங்காரப்பின் மகளும், நடிகர் சிவராஜ்குமாரின் மனைவியுமான கீதா சிவராஜ்குமார், மாநில போக்குவரத்து துறை மந்திரி ராமலிங்க ரெட்டி மகள் சவுமியா ரெட்டி பெங்களூரு தெற்கு தொகுதியிலும் களமிறங்கியுள்ளனர்.

சட்டசபையில் பெற்றதைபோல் வெற்றியை தக்க வைக்குமா காங்கிரஸ்....? அல்லது விட்ட இடத்தை பா.ஜனதா பிடிக்குமா? என்பது வரும் ஜூன் 04 ஆம் தேதி தெரிந்து விடும்... எப்படியிருந்தாலும் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு..


Next Story