சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 140 தொகுதிகளில் வெற்றி பெறும்; எடியூரப்பா பேட்டி


சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 140 தொகுதிகளில் வெற்றி பெறும்; எடியூரப்பா பேட்டி
x
தினத்தந்தி 7 March 2023 6:45 PM GMT (Updated: 7 March 2023 6:46 PM GMT)

கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 140 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று எடியூரப்பா கூறியுள்ளார்.

பெங்களூரு:

கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 140 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று எடியூரப்பா கூறியுள்ளார்.

முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

போட்டியிட வாய்ப்பு

கர்நாடக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி மாநிலத்தில் பா.ஜனதாவை பலப்படுத்த நாங்கள் தீவிரமாக பணியாற்றி வருகிறோம். வேட்பாளர் பட்டியலை கட்சி மேலிடம், மாநில தலைவர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தி முடிவு செய்யும். யாருக்கு டிக்கெட் வழங்க வேண்டும் என்பதை கட்சி மேலிடம் முடிவு செய்யும். தொகுதிகளில் நிலவும் மக்களின் மனநிலையை பொறுத்து வேட்பாளர் யார் என்பதை மேலிடம் இறுதி செய்யும்.

பா.ஜனதா வெற்றி பெற்றால் யார் முதல்-மந்திரி என்பது கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்படும். வருகிற சட்டசபை தேர்தலை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் தலைமையின் கீழ் எதிர்கொள்வோம். எங்கள் கட்சியில் தற்போது எம்.எல்.ஏ.க்களாக உள்ளவர்களில் 5, 6 பேர் தவிர மற்ற அனைவருக்கும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும்.

அமோக வரவேற்பு

நாங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் எங்களுக்கு மக்களின் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. எங்களின் எதிர்பார்ப்பை மீறி மக்களின் கூட்டம் கூடுகிறது. இதை பார்க்கும்போது, 140 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெறும். பெரும்பான்மை பலத்துடன் பா.ஜனதா மீண்டும் ஆட்சி அமைக்கும். இதை யாராலும் தடுக்க முடியாது.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.


Next Story