சங்கத் தமிழ் போற்றும் தங்கத்தலைவி


சங்கத் தமிழ் போற்றும் தங்கத்தலைவி
x
தினத்தந்தி 24 Feb 2020 8:45 AM GMT (Updated: 24 Feb 2020 8:45 AM GMT)

இன்று(பிப்ரவரி 24-ந்தேதி) தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள். தமிழர்களின் நல்வாழ்வுக்கும், தமிழ் மண்ணின் உயர்வுக்கும் விடியல் தந்த ஓர் வீரத்தலைவியின் விலாசம் இந்த மண்ணிற்கு கிடைத்த நாள்!

- எடப்பாடி பழனிசாமி, முதல்-அமைச்சர்  

இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா காலம் நமக்கு அளித்த கருணைப் புதையல்! காணக் கிடைக்காத கற்பூரப் பெட்டகம்! அற்புதங்களின் உறைவிடம்! ஆற்றலின் ஊற்றுக்கண்! சிந்தனை திறனும், செயலாற்றலும், சீரிய நோக்கும், சீர்மிகு பேச்சும், நேரிய போக்கும் நிறைந்தவர்.

எதற்கும் அஞ்சா நெஞ்சுரம் கொண்டவர். தமிழக அரசியலிலே பல அற்புதங்களை நிகழ்த்தியவர். எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாய் எங்களுக்கெல்லாம் கருணைத் தாயாக திகழ்ந்த நாங்கள் நித்தம் போற்றி வணங்கும் எங்கள் குல தெய்வம். தமிழ்மொழியும், தமிழர்களும், தமிழகமும் தலைநிமிரவே தன்னை அர்ப்பணித்திட்ட தியாக தீபம். “மக்களால் நான், மக்களுக்காக நான்” என வாழ்ந்திட்ட எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும், என எந்நாளும் அல்லும் பகலும் அயராது உழைத்திட்ட அன்பு தெய்வம் நம் அம்மா!

திராவிட லட்சியத் தலைவர்கள் தந்தை பெரியார், பேரறிஞர் பெருந்தகை அண்ணா, பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆகிய தலைவர்கள் வழியில், திராவிட தீபத்தை அணையாமல் காத்துவந்த ஆற்றலாளர். அஞ்சாமை, குடும்ப சிறப்பு, காக்கும் தன்மை, பல நூல்களை கற்று அதன்மூலம் பெற்ற அறிவு, நன்முயற்சி ஆகிய இந்த ஐந்து சிறப்புகளையும் பெற்றவரே சிறந்த அமைச்சர் என்று உலகப் பொதுமறையாம் திருக்குறள் சொல்கிறது. இவை அனைத்தையும் ஒருங்கே பெற்ற ஒப்பற்ற தலைவர்தான் நம் அம்மா!

புரட்சித்தலைவியின் ஆட்சி காலம் தமிழக வரலாற்றின் தன்னிகரற்ற, தனிப்பெரும் சகாப்தம் என்பதை உலகறியும். அம்மாவின் ஆட்சி காலம் தான் கழகத்தின் அரசாட்சி காலங்கள் தான் தமிழகத்தின் பொற்காலம் என்பதை மக்கள் உணர்வார்கள்.

சரித்திரம் தனிமனித சரித்திரம் இல்லை. இந்த சமுதாயத்தின் சரித்திரம் இதை வருங்காலம் பேசும். இனிவரும் தலைமுறையும் வாழ்த்தும். கழகத்தையும், தமிழகத்தையும் எந்நாளும் கட்டிக் காத்திட்ட நம் புரட்சித்தலைவி அம்மா பிரம்மன் படைத்த பொன்னோவியம், வெற்றி தேவதையால் தத்தெடுக்கப்பட்ட தெய்வீகத் தாரகை, அரசியலில் பொய்யர்களை புரட்டி எடுத்திட்ட போர்க்குணச் சூறாவளி!

எட்டுத் திக்கும் வெற்றி சுற்றி நின்றபோதும், நிதானம் தவறாமல் நியாயத்தை நிலைநிறுத்திட நேர்மைக்கு சொந்தக்காரர். கொடை, அணி, செங்கோல், குடிஓம்பல் நான்கும் “உடையானாம் வேந்தர்க்கு ஒளி” என்று வள்ளுவப் பெருந்தகை வகுத்தளித்த ஆள்வோருக்கான அந்த இலக்கணத்திற்கு இலக்கியமாய் திகழ்ந்தவர் நம் இதய தெய்வம். இத்தகைய ஐம்பெரும் குணங்களும் நம் அம்மாவிடம் நிறைந்திருந்ததால்தான், பிளவுபட்ட கழகத்தை ஒன்றிணைத்து, கருத்து வேறுபாடு கொண்டிருந்தவர்களையும், தம்மைத் தவறாக, அவதூறாக விமர்சித்தவர்களையும், பேரறிஞர் அண்ணா சொன்ன “மறப்போம், மன்னிப்போம்” என்ற கருத்துப்படி எல்லாவற்றையும், மறந்து, மன்னித்து அவர்களையும் அரவணைத்து சுமார் 28 ஆண்டுகளுக்கும் மேலாக கழகத்தின் நிரந்தர பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்று, லட்சங்களில் இருந்த கழக உறுப்பினர்களை கோடிகளுக்கு உயர்த்தி, எந்நாளும், எவராலும் வெல்ல முடியாத எக்கு கோட்டையாக கழகத்தை உருவாக்கி சென்றிருப்பவர் நம் இதய தெய்வம் அம்மா. அதைக் காக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் நமக்கு உண்டு என்பதை அனைவரும் உணர்வோம்!

1991, 2001, 2011, 2016 என கழக ஆட்சியை நிறுவி, மாநிலத்தின் முதல்-அமைச்சர் பொறுப்பேற்று, இந்த மக்களுக்காக வழங்கிய வளர்ச்சித் திட்டங்கள், நலத் திட்டங்கள் ஏராளம்! ஏராளம்!!

பெண் சிசுக் கொலை எனும் பேராபத்தை தடுத்திட தொட்டில் குழந்தை திட்டம், எட்டுத்திக்கும் தமிழனின் வெற்றிக் கொடி பறந்திட தஞ்சாவூரில் எட்டாம் உலகத் தமிழ் மாநாடு அங்கே நான்காம் தமிழாக அறிவியில் தமிழ் அறிமுகம். சர்வதேச தரத்தில் நேரு விளையாட்டு அரங்கம், சொர்க்கலோகம் போல திரைப்பட நகரம், பெண் இனம் பாதுகாக்க அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், முடிவெடுக்கும் அதிகாரம் மிக்க தலைமைச் செயலாளர் பொறுப்பில் பெண் அதிகாரி, பெண் கமாண்டோ படை, தாலிக்கு தங்கம், திருமண உதவித் தொகை ரூ.50 ஆயிரம் வரை உயர்வு

ஏழை-எளிய பெண்களின் வாழ்வாதாரம் உயர “மகளிர் சுய உதவிக் குழுக்கள்” கிராமங்கள் தோறும் கழிவறை வசதிகளுடன் கூடிய சுகாதார வளாகம், கர்ப்பிணி பெண்களுக்கு உதவித் தொகை, குழந்தைகளுக்கு அம்மா பரிசுப் பெட்டகம், மாணவச் செல்வங்களுக்கு விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, வகையிலான கல்வி உபகரணங்கள், வீடுதோறும் விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, ஏழைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்திட விலையில்லா கறவை பசுக்கள், ஆடுகள், அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா மருந்தகம், அம்மா சிமெண்ட் என ஏராளமான “அம்மா திட்டங்கள்”. முதியோர், விதவை, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை உயர்வு, நிலத்தடி நீரை அதிகரிக்க மாபெரும் மழைநீர் சேகரிப்புத் திட்டம்

அனைத்து குடும்ப அட்டைதாரருக்கும் விலையில்லா அரிசி வினியோகம், காவிரி நதி நீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு, முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தியது, பசுமை வீடுகள் திட்டம்.

உலமாக்களுக்கு ஓய்வூதியம், முஸ்லிம்களுக்கு ஹஜ் யாத்திரைக்கு உதவி, கிறிஸ்தவர்களுக்கு ஜெருசலேம் செல்ல உதவி, இந்துக்கள் மானசரோவர் செல்ல உதவி இப்படி எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி மக்கள் உள்ளங்களில் நிரந்தர இடம் பிடித்த மாதரசி நம் இதய தெய்வம் அம்மா.

மகத்தில் பிறந்து ஜெகத்தை ஆண்ட, “தமிழகமே எனது குடும்பம், தமிழ்நாட்டு மக்களே என் பிள்ளைகள், தமிழக மக்களின் நலனே என் நலன்” என வாழ்ந்திட்ட இந்திய அரசியல் வானில் துருவ நட்சத்திரமாய் தென்னக அரசியல் வானில் விடிவெள்ளியாய் தமிழக அரசியல் வானில் முழுநிலவாய் உலவிட்ட சாதனைகளின் சகாப்தம், சங்கத் தமிழ் போற்றும் எங்கள் தங்கத்தலைவி பிறந்த இந்த நன்நாளில் அம்மா வழியில் அயராது உழைப்போம்! அம்மாவின் லட்சியங்களை, கனவுகளை நிறைவேற்றுவோம்! அனைவரும் ஒற்றுமையாக, ஓரணியில் நின்று, கழகத்தையும், தமிழகத்தையும் காத்திடுவோம் என சூளுரைத்து செயல்படுவோம்!

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் குறிக்கோளை தற்போது நடைபெறும் அம்மாவின் அரசு நிறைவேற்றி, இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மையான மாநிலம் என்ற பெருமை பெற்று இருக்கிறது. புரட்சித்தலைவி தமிழ்நாட்டு மக்களுக்காக அளித்த தொலைநோக்குத் திட்டங்களும், அத்திட்டங்களைச் செயல்படுத்தியதோடு மட்டுமல்லாமல், அம்மாவின் வழியில் மக்களுக்கான புதிய திட்டங்களை என் தலைமையிலான அம்மாவின் அரசு செயல்படுத்துவது தான் இத்தகைய மகத்தான வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது. ஏழை, எளியோர், ஆதரவற்றோர், முதியோர், விதவைகள், நலிவுற்ற பிரிவினர் ஆகிய சமுதாயத்தின் அடித்தட்டு மக்களுக்கு கை கொடுத்து அவர்களை உயர்த்த வேண்டுமென்பதில் நான் அளவற்ற அக்கறை கொண்டுள்ளேன் என்று அம்மா குறிப்பிட்டார்கள். அம்மாவின் அரசால் அறிவிக்கப்படும் திட்டங்களில் பெரும்பாலானவை அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்களாகவே செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதனால் தான், இன்னும் 100 ஆண்டுகளானாலும் அம்மாவின் அரசு தமிழ்நாட்டில் நிலை கொண்டிருக்கும் என்ற பொது நோக்கர்களால் கருதப்படுகிறது. மாற்றம் தந்த மக்களுக்கு ஏற்றம் தந்த அரசாக அம்மாவின் அரசு நடந்ததைப் போலவே, அம்மாவின் வழியில் நடைபெறும் அம்மாவின் அரசும் மக்களை மகிழ்ச்சியோடு வைத்திருப்பதில் உறுதியாக இருக்கிறது.

Next Story