தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை; மோடியுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு


தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை; மோடியுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு
x
தினத்தந்தி 15 Aug 2017 12:30 AM GMT (Updated: 14 Aug 2017 9:09 PM GMT)

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பதவி ஏற்பு விழாவில் பங்கேற்பதற்காக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்று இருந்தார்.

புதுடெல்லி,

அவர் மராட்டிய மாநிலம் ஷீரடி சாய்பாபா கோவில் உள்ளிட்ட ஆன்மிக தலங்களுக்கு சுற்றுப்பயணம் சென்றார்.  இந்த நிலையில் நேற்று அவர் டெல்லியில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது மைத்ரேயன் எம்.பி. உடன் இருந்தார்.

பின்னர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாட்டு மக்கள் அனைவருக்கும் எங்களது சுதந்திர தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்திய குடியரசு துணைத்தலைவர் பதவி ஏற்பு விழாவுக்கு வந்திருந்த நான் இன்று (நேற்று) பிரதமரை சந்தித்து தமிழ்நாட்டின் அரசியல் சூழ்நிலைகள் பற்றி பல்வேறு கருத்துகளை பரிமாறிக்கொண்ட நல்ல சூழல் ஏற்பட்டது. இன்று நடைபெற்று கொண்டிருக்கும் தமிழக அரசின் நிலைப்பாட்டினை பிரதமரிடம் விரிவாக விளக்கி கூறினேன்.

பொதுவாக தமிழக அரசின் சூழ்நிலைகள், நிலைப்பாடுகள், நடக்கும் பிரச்சினைகள் பற்றி விரிவாக பேசினோம். அணிகள் இணைப்பு விஷயத்தை பொறுத்தவரை, ஏற்கனவே சொன்னதுபோல தமிழக மக்கள், அ.தி.மு.க. தொண்டர்களின் எண்ணங்கள், கருத்துகளின் அடிப்படையில்தான் அது இருக்கும். இதுவரை எங்களது நிலைப்பாடு அதுவாகவே இருக்கிறது.

எந்த முடிவு எடுத்தால் தமிழக மக்களுக்கு நன்மை பயக்கும் விஷயமாக இருக்குமோ, அந்த முடிவை நாங்கள் எடுப்போம்.  இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

பேட்டியின்போது எம்.பி.க் கள் டாக்டர் மைத்ரேயன், அசோக்குமார், சுந்தரம், முன்னாள் அமைச்சர்கள் கே.பி. முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.  பிரதமர் மோடியை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் நேற்று டெல்லியில் இருந்து கேரளாவுக்கு புறப்பட்டு சென்றார். குருவாயூர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய அவர் சென்றிருப்பதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Next Story