ஆதாரமின்றி குற்றச்சாட்டு கூறும் கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது: அமைச்சர் ஜெயக்குமார்


ஆதாரமின்றி குற்றச்சாட்டு கூறும் கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது:  அமைச்சர் ஜெயக்குமார்
x
தினத்தந்தி 20 Nov 2017 5:38 AM GMT (Updated: 20 Nov 2017 5:37 AM GMT)

ஆதாரமின்றி குற்றச்சாட்டு கூறும் கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை,

நடிகர் கமல்ஹாசன் தீவிர அரசியலில் ஈடுபட தயாராகி வருகிறார். கமல்ஹாசன் அரசியல் விமர்சனங்களை தன்னுடைய டுவிட்டர் இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார். தற்போது அவர் டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில், ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான். கண்டுபிடித்தபின், அதை நிரூபிக்காமல் போவதும் குற்றம்தானே. ஆராய்ச்சி மணி அடித்தாயிற்று. குற்றவாளிகள் நாடாளக்கூடாது. மக்களும் அவரால் ஆய குடியரசும் செயல்பட்டே ஆகவேண்டும். மக்களே நடுவராக வேண்டும். விழித்தெழுவோம்.. தயவாய் என குறிப்பிட்டு உள்ளார்.

இந்த நிலையில், சென்னை பட்டினப்பாக்கத்தில் தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.  அவர் பேசும்பொழுது, தவறை சுட்டி காட்டினால் திருத்தி கொள்ளலாம்.  கற்பனையான குற்றச்சாட்டு எனில் அரசு அவர் மீது நடவடிக்கை எடுக்க தயங்காது என கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர், கமல்ஹாசன் கற்பனை உலகத்தில் இருக்கிறார்.  டுவிட்டரை விட்டு அவர் வெளியே வரவேண்டும்.  அரசு மீது தவறு உள்ளதென்றால் அதனை சுட்டி காட்ட  வேண்டும்.

அவர் யாருடைய கைக்கூலியாகவோ அல்லது யாருடைய கைப்பாவையாகவோ செயல்படுவது தெரிகிறது.  அரசு மீது ஆதாரமின்றி தொடர்ந்து குற்றச்சாட்டு கூறினால் அவர் மீது நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது என்றும் கூறியுள்ளார்.

Next Story