‘ஒகி’ புயல் தென் மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் வானிலை மையம் அறிவிப்பு


‘ஒகி’ புயல் தென் மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் வானிலை மையம் அறிவிப்பு
x
தினத்தந்தி 1 Dec 2017 12:00 AM GMT (Updated: 30 Nov 2017 10:34 PM GMT)

கன்னியாகுமரி அருகே நிலைகொண்டுள்ள ‘ஒகி’ புயல் காரணமாக தென் மாவட்டங்களில் 2 நாட்கள் சில இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இந்த நிலையில் தென்மேற்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறியது நேற்று அது மீண்டும் வலுப்பெற்று புயல் சின்னமாக மாறியது. அதற்கு ‘ஒகி’ என பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இந்த புயல் சின்னம் காரணமாக தென் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந் திரன் கூறியதாவது:-

தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த குறைந்தழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து நேற்று அதிகாலை 2.30 மணிக்கு தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. அந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று நேற்று காலை 8.30 மணிக்கு புயல் ஆக மாறியது. அந்த புயலுக்கு ‘ஒகி’ என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்த பெயரை வங்காள தேசம் சூட்டி உள்ளது.

‘ஒகி’ புயல் கன்னியாகுமரியில் இருந்து தெற்கே 60 கிலோ மீட்டர் தூரத்திலும், திருவனந்தபுரத்தில் இருந்து 120 கிலோ மீட்டர் தூரத்திலும், மினிக்காய் தீவில் இருந்து 480 கிலோ மீட்டர் தூரத்திலும் உள்ளது. அது மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து லட்சத்தீவு நோக்கி செல்லும். அது 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாற உள்ளது.

இதன் காரணமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் அடுத்த 2 நாட்களுக்கு அநேக இடங்களில் மிதமான மழை பெய்யும். கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய தென் மாவட்டங்களில் சில இடங்களில் கன மழை முதல் மிக கனமழை வரை பெய்யும்.

தேனி, திண்டுக்கல், கோவை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 65 கிலோ மீட்டர் முதல் 75 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும். எனவே தென் தமிழகம் மற்றும் கன்னியாகுமரி பகுதியையொட்டிய கடல் பகுதியில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள்.
இவ்வாறு எஸ்.பாலச்சந்திரன் கூறினார்.

பாம்பன், தூத்துக்குடி, ராமேசுவரம், குளச்சல் ஆகிய துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, எண்ணூர், காரைக்கால் துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டு இருக்கிறது.

இதற்கிடையே தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிதாக ஒரு குறைந்தழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. அது குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாற வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. அது தமிழகத்தின் வட கடலோர பகுதி அல்லது ஆந்திராவை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story