தென்மாவட்டங்களில் கனமழை - வங்க கடலில் புதிய புயல்


தென்மாவட்டங்களில் கனமழை - வங்க கடலில் புதிய புயல்
x
தினத்தந்தி 2 Dec 2017 12:15 AM GMT (Updated: 1 Dec 2017 8:35 PM GMT)

‘ஒகி’ புயல் ஆபத்து நீங்கினாலும், வங்க கடலில் உருவாகி இருக்கும் புதிய புயல் சின்னம் சென்னையை நோக்கி நகர்ந்து வருகிறது.

சென்னை,

வங்க கடலில் கன்னியாகுமரி அருகே நிலைகொண்டிருந்த ‘ஒகி’ புயல் காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நேற்று முன்தினம் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
கொட்டித்தீர்த்த மழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன.

ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டபடி ஒகி புயல், தொடர்ந்து மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து அரபிக்கடலில் உள்ள லட்சத்தீவை நோக்கி செல்கிறது. இதனால் தென் மாவட்டங்களுக்கு புயல் ஆபத்து நீங்கியது. என்றாலும்,  தென் மாவட்டங்களில் நேற்றும் மழை நீடித்தது. பிற மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது. பலத்த காற்றுடன் பெய்த கனமழையால்  இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. அது படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், பின்னர் புயல் சின்னமாகவும் மாற வாய்ப்பு உள்ளது. ‘சாகர்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ள அந்த புயல் சின்னம் வடமேற்கு திசையில் சென்னையை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

கன்னியாகுமரி அருகே நிலைகொண்டிருந்த ‘ஒகி’ புயல் வலுப்பெற்று நகர்ந்து சென்று லட்சத்தீவு பகுதியில் உள்ள அமினித்தீவுக்கு தென்கிழக்கே 270 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டு உள்ளது. இது மேலும் வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) லட்சத்தீவை கடந்து செல்லும்.

புயலின் தலைப்பகுதி தற்போது லட்சத்தீவு அருகே இருந்தபோதிலும் அதன் வால் பகுதி தமிழகத்தை ஒட்டிய பகுதியில் இருக்கிறது. அதன் தன்மை குறித்து மேற்கொண்டு எதுவும் சொல்ல முடியாது.

இதற்கிடையே தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவும் வலுவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி 2-ந் தேதி (இன்று) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அது புயல்சின்னமாக வலுப்பெற்று வருகிற 4-ந் தேதிக்குள் (திங்கட்கிழமை) வடமேற்கு திசையில் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதியை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தமிழகத்தில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். தமிழகத்தின் இதர பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்யும்.

தென் தமிழகம் மற்றும் கன்னியாகுமரியை யொட்டிய பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக உள்ளது. மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் குமரி கடல், அரபிக்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீனவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார் கள். ராமநாதபுரம், தூத்துக் குடி, நெல்லை மாவட்ட கடலோர பகுதிகளில் மீனவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

‘ஒகி’ புயல் காரணமாக தமிழகத்தில் 21 இடங்களில் மிக கனமழை பெய்து இருக்கிறது.

இந்த வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகத்தில் கடந்த அக்டோபர் 1-ந் தேதி முதல் நவம்பர் 27-ந் தேதி வரை இயல்பை விட 18 சத வீதம் குறைவாக மழை பெய்து இருந்தது. ஒகி புயல் காரணமாக பெய்த மழையால், இயல்பான மழை அளவை விட 4 சதவீதம் தான் குறைவாக இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்தில், நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

பாபநாசம் (நெல்லை மாவட்டம்) 45 செ.மீ., மணிமுத்தாறு 38 செ.மீ., மயிலாடி 19 செ.மீ., தென்காசி 17 செ.மீ., தக்கலை, பேச்சிப்பாறை, கூடலூர், பூதப்பாண்டி தலா 16 செ.மீ., வத்திராயிருப்பு 15 செ.மீ., மணியாச்சி, இரணியல், குளச்சல் தலா 14 செ.மீ., நாகர் கோவில், கொடைக்கானல், குன்னூர் தலா 13 செ.மீ., குழித்துறை, ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தான்குளம், செங்கோட்டை, ஆய்க்குடி, குன்னூர், ஸ்ரீவைகுண்டம், சமயபுரம் ஆகிய இடங்களில் தலா 12 செ.மீ., ஒட்டப்பிடாரம், திருச்செந்தூர், கோவில்பட்டி ஆகிய இடங்களில் தலா 11 செ.மீ., தூத்துக்குடி, உத்தம பாளையம், அம்பாசமுத்திரம், கன்னியாகுமரி தலா 10 செ.மீ., ராதாபுரம், போளூர், கோவில்பட்டி, மாதவரம், சங்கரன்கோவில், சாத்தூர் தலா 9 செ.மீ., ஆரணி, சிவகங்கை, சிவகிரி, உத்திரமேரூர், ராஜபாளையம், அண்ணா பல்கலைக்கழகம், ஊட்டி, கல்லணை, செம்பரம்பாக்கம், டி.ஜி.பி. அலுவலகம் தலா 8 செ.மீ., வட சென்னை 7 செ.மீ. மழை பெய்து உள்ளது.


Next Story