கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் 6வது நாளாக தொடருகிறது


கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் 6வது நாளாக தொடருகிறது
x
தினத்தந்தி 17 Feb 2018 3:38 AM GMT (Updated: 17 Feb 2018 3:38 AM GMT)

கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் இன்று 6வது நாளாக தொடருகிறது. #Tamilnews

நாமக்கல்,

தென்மண்டல பல்க் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு சொந்தமாக மொத்தம் 7,500 கியாஸ் டேங்கர் லாரிகள் உள்ளன. இவற்றில் 4,500 டேங்கர் லாரிகள் இந்தியா முழுவதும் இயக்கப்பட்டு வருகின்றன. மீதமுள்ள 3 ஆயிரம் டேங்கர் லாரிகள் புதிய டெண்டரை எதிர்நோக்கி உள்ளன.

இந்தநிலையில் புதிய வாடகை டெண்டரை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த ஜனவரி மாதம் 23-ந் தேதி அறிவித்தது. மேலும் மண்டல வாரியாக நடத்தப்பட்ட டெண்டர் நடைமுறையில் மாற்றம் செய்து, ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனி டெண்டர் என்ற புதிய முறையை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இந்த புதிய டெண்டர் நடைமுறை மூலம் ஒரு வாகனம் எந்த மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளதோ, அந்த மாநிலத்தில் நடைபெறும் டெண்டரில் தான் பங்கேற்க முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது.

எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாநில அளவிலான வாடகை டெண்டர் நடைமுறையை திரும்பப்பெற வலியுறுத்தியும் கடந்த திங்கட்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்துவது என்று நாமக்கல்லில் நடந்த தென்மண்டல பல்க் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் கடந்த 12ந்தேதியில் இருந்து திட்டமிட்டபடி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த போராட்டம் இன்று 6வது நாளாக தொடர்கிறது.  இதனால் லாரி உரிமையாளர்களுக்கு ரூ.2 கோடி தினமும் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

இந்த வேலை நிறுத்தத்தினால் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, தெலுங்கானா ஆகிய தென்மாநிலங்களில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

Next Story