‘அடுத்த ஆண்டு நிஜ பட்ஜெட்டை தாக்கல் செய்வோம்’ டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் பேச்சு


‘அடுத்த ஆண்டு நிஜ பட்ஜெட்டை தாக்கல் செய்வோம்’ டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் பேச்சு
x
தினத்தந்தி 17 Feb 2018 9:30 PM GMT (Updated: 17 Feb 2018 8:15 PM GMT)

அடுத்த ஆண்டு நிஜ பட்ஜெட்டை தாக்கல் செய்வோம் என்று டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தெரிவித்தனர்.

சென்னை,

2018-2019-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இவ்வாறு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு பா.ம.க சார்பில் நிழல் பட்ஜெட் வெளியிடுவது வழக்கம். அந்தவகையில், சமீபத்தில் கோவையில் பா.ம.க. சார்பில் வேளாண் நிழல் பட்ஜெட் வெளியிடப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக சென்னையில் நேற்று பொது நிழல் பட்ஜெட் பா.ம.க. சார்பில் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார். தலைவர் ஜி.கே.மணி, இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., துணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தார்.

பொது நிழல் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

தனி அமைச்சரவை குழு

* தமிழகத்தில் அடுத்தக்கட்டமாக வேளாண்மை சார்ந்த திட்டங்களை விரைந்து செயல்படுத்துவதற்காக மூத்த அமைச்சர்களை கொண்டு தனி அமைச்சரவை குழு அமைக்கப்படும்.

* நிதிநிலை அறிக்கை தயாரிப்புக்கு முன் அனைத்து துறைகளின் உயர் அதிகாரிகள், தொழில் அதிபர்கள், கல்வியாளர்கள், தொண்டு நிறுவனங்கள், வணிகர் சங்கங்கள், மகளிர் அமைப்புகள், விவசாய சங்கங்கள், நெசவாளர்கள், மீனவர் சங்கங்கள், நுகர்வோர் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், தொழிற்சங்கங்கள், அரசு ஊழியர்-ஆசிரியர் சங்கங்கள் போன்ற அமைப்புகளோடு அரசு கலந்தாய்வு செய்ய வேண்டும்.

* பெண்களின் முன்னேற்றத்தை கருத்தில்கொண்டு, ஒவ்வொரு திட்டத்திலும் சுமார் 50 சதவீதம் தொகை பெண்களுக்காக ஒதுக்கப்படும். இதுகுறித்த விவரங்கள் அடங்கிய பாலின நிதிநிலை அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும்.

முன்னுரிமை

* 2018-19-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் வெளிப்படைத்தன்மை, ஊழல் ஒழிப்பு, நிர்வாக சீர்திருத்தம், விவசாயம், புதிய பாசனத்திட்டங்களை செயல்படுத்துதல், கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், தொழில் வளர்ச்சி, அரசின் வருவாயை அதிகரித்தல் போன்ற 10 அம்சங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

* அரசிடம் பொதுமக்கள் அளித்த மனுக்கள் அடங்கிய கோப்புகள் எந்த நிலையிலான பரிசீலனையில் உள்ளன என்பதை இணையதளம் மூலம் பொதுமக்களே அறிந்துகொள்ளும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படும்.

* மாநில அளவில் ஊழல் ஒழிப்புக்கான லோக்அயுக்தா அமைப்பு ஏற்படுத்தப்படும்.

* குடிமக்களுக்கு சேவை வழங்குவதுதான் அரசின் முதல் கடமையாகும். இதை கட்டாயமாக்கும் நோக்குடனும், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையிலும் பொதுசேவை பெறும் உரிமைச்சட்ட முன்வரைவு நடப்பு கூட்டத்தொடரில் கொண்டு வந்து நிறைவேற்றப்படும்.

கல்வி, சுகாதாரம், விவசாயம்...

* மக்கள் உயிர்வாழ்வதற்கு தேவையான, முன்னேற்றத்துக்கு வழிவகுக்கக்கூடிய, கல்வி, சுகாதாரம், விவசாயம் ஆகிய மூன்றுக்கும் தேவையான அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.

* குற்றவாளிகளின் படம், பெயருக்கு தடை என்ற அடிப்படையில், தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவப்படம் சட்டப்பேரவையில் இருந்து நீக்கப்படும். ‘அம்மா’ என்ற பெயரில் 50-க்கும் மேற்பட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் பெயர் மாற்றப்பட்டு அரசு திட்டங்களாக செயல்படுத்தப்படும்.

* படித்த இளைஞர்களுக்கு வேலைவழங்கும் நோக்குடன் அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அனுமதி இல்லை

* ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை.

* சமூகநீதியின் தொட்டிலாக போற்றப்படும் தமிழ்நாட்டில் கடந்த 2007-ம் ஆண்டு முதல் மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதே நிலையை தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.

தாக்கல் செய்வோம்

இதையடுத்து டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசியதாவது:-

94 தலைப்புகள், 417 யோசனைகள், 72 பக்கங்களில் பொது நிழல் பட்ஜெட் இப்போது வெளியிட்டு இருக்கிறோம்.

அடுத்த ஆண்டு நிஜ பட்ஜெட்டை நாங்கள் தாக்கல் செய்வோம். காவிரி நீர் பங்கீட்டு தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது. இதை ஏற்க முடியாது. தீர்ப்பை எதிர்த்து 5, 7 மற்றும் 11 நீதிபதிகள் கொண்ட அமர்வில் மேல்முறையீடு செய்ய வேண்டும். அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் பேசினர். 

Next Story